Published : 22 Feb 2025 05:35 AM
Last Updated : 22 Feb 2025 05:35 AM
கோடம்பாக்கத்தில் உள்ள தீர்க்கபுரீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி கோயில்களில் பிப்.26-ம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் புலியூர் வன்னியர் தெருவில் பாலவிநாயகர், பாலமுருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப். 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
25-ம் தேதி அபிஷேகம்: இதையொட்டி, 26-ம் தேதி வரை கோயிலில், தினசரி அபிஷேகம், ருத்ரபாராயணம், திருமுறை ஓதுதல், சகஸ்ரநாம அர்ச்சனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, பிப். 23-ம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு பாலவிநாயகர் திருவாசக முற்றோதுதல் குழுவினர், சென்னை திருவாசக பேரவை குழுவினர் இணைந்து நடத்தும் திருவாசக முற்றோதுதல் விழா நடைபெறுகிறது. 24-ம் தேதி நாட்டிய பள்ளி மாணவர்களின் சிவபார்வதி கல்யாண நாட்டிய நாடகம், 25-ம் தேதி மகாபிரதோஷ அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
மகா சிவராத்திரி நாளான 26-ம் தேதி மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், கலச ஆவாஹணம், ஏகாதசி ருத்ர ஜப பாராயணம், மகா அபிஷேகம், ருத்ர ஹோமம், வசோர்தரா ஹோமம், பூர்ணஹூதி தீபாராதனை, ஏகாதச ருத்ராபிஷேகம், மகா தீபாராதனை, முதல் கால அபிஷேகம், இரண்டாம் கால அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, 27-ம் தேதி அதிகாலை 12 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், தீபாராதனையும், அதிகாலை 3 மணிக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும் நடக்கிறது.
இதேபோல், கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 26-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, பிப். 26-ம் தேதி மகா சிவராத்திரி பூஜை, சப்தகன்னி வழிபாடு, 27-ம் தேதி பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை, இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா புறப்பாடு, அதனை தொடர்ந்து கும்ப மிடுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. இதையடுத்து, 28-ம் தேதி ஊஞ்சல் சேவையும், மார்ச் 2-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT