Last Updated : 19 Feb, 2025 02:41 PM

 

Published : 19 Feb 2025 02:41 PM
Last Updated : 19 Feb 2025 02:41 PM

365-வது ஆண்டாக காவடிகளுடன் பழநி வந்தடைந்த எடப்பாடி பக்தர்கள்: மலைக்கோயிலில் தங்கி வழிபாடு

படம்: நா.தங்கரத்தினம்

சேலம்: தைப்பூசத் திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் காவடிகளுடன் பழநிக்கு வந்து சேர்ந்தனர். இன்று (பிப்.19) இரவு முழுவதும் மலைக்கோயிலில் தங்கியிருந்து வழிபாடு நடத்த உள்ளனர்.

பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி 365-வது ஆண்டாக சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து காவடி சுமந்தபடி பாதயாத்திரையாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் ஒவ்வொரு குழுவாக பழநிக்கு வந்தனர். இன்று புதன்கிழமை காலை பழநி சண்முகநதியில் புனித நீராடிய பக்தர்கள், பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் மலைக்கோயிலுக்கு பால் குடம், மயில் மற்றும் இளநீர் காவடிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

இன்று மாலை சாயரட்சை மற்றும் ராக்கால பூஜையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மலைக்கோயிலில் இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபாடு நடத்த உள்ளனர். தங்குவதற்கு வசதியாக காலை முதலே போட்டிப் போட்டுக் கொண்டு பக்தர்கள் மலைக்கோயிலில் தங்கள் உடமைகளை வைத்து இடம் பிடித்தனர்.

ஏற்கெனவே பாதயாத்திரை பக்தர்களுக்காக தயார் செய்த 15 டன் பஞ்சாமிர்தத்தில் ஒரு பகுதியை தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து விட்டு பக்தர்களுக்கு டப்பாவில் நிரப்பி வருகின்றனர். இன்று மாலை மலைக்கோயிலில் படி பூஜை, பாத பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். பழநி மலைக்கோயிலில் ஒருநாள் இரவு தங்கி வழிபட்டு செல்லும் உரிமை சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் சமுதாயத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x