Published : 19 Feb 2025 12:06 AM
Last Updated : 19 Feb 2025 12:06 AM

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராமநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள். படங்கள்: எல்.பாலச்சந்தர்

ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு ராமநாத சுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் நந்திகேசுவரர் மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

அங்கு தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியது. இதில், கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு கோயில் நாயகர் வாயிலில் ஒளிவழிபாடு முடிந்து சுவாமி, நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். முன்னதாக மாலை 6 மணியளவில் திருகல்யாண மண்டபத்தில் ஆன்மிகச் சொற்பொழி, விவாத அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வரும் 20-ம் தேதி கெந்தமாதன பர்வதத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுவதை முன்னிட்டு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ராமநாத சுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரியும், 27-ம் தேதி அக்னி தீர்த்தக் கடற்கரையில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். மேலும் தினமும் திருக்கல்யாண மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x