Published : 12 Feb 2025 06:51 AM
Last Updated : 12 Feb 2025 06:51 AM
சென்னை: தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி, கந்தகோட்டம், அயப்பாக்கம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வடபழனி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி யெழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து முருகனுக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் போன்ற சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பரவசத்துடன் ‘அரோகரா’ கோஷத்தை எழுப்பி முருகனை வழிபட்டனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முதியோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், பால் குடம் எடுத்து வந்தவர்கள், பொது தரிசனத்துக்கு வந்தவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். இரவு 8.30 மணி அளவில் வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் வடபழனியில் இரவு 10 மணி வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
அதேபோல பாரிமுனை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மயில் வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி சென்னை அயப்பாக்கத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2,000 பெண்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மஞ்சள் நிற புடவையில் 2,000 பெண்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக சென்று வழிபாடு மேற்கொண்டனர். பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோயிலுக்கும் காவடி, பால்குடம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதேபோல் கொளத்தூர் குமரன் நகர் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சென்னை வடபழனி, கந்தகோட்டம், அயப்பாக்கம், பென்சட்நகர் முருகன் கோயில்களில் தைப்பூசத்தை யொட்டி கூட்டம் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பெரிதளவில் காணப்பட்டது.
இதற்கிடையே வள்ளலாரின் ஜோதிமயமான நாளை முன்னிட்டு தைப்பூசத் திருநாளில் சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள வள்ளலார் வசித்த இல்லத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வள்ளலார் இல்லத்தில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்து, திருவருட்பா ஆறாம் திருமுறை பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்கள் அதிகாலை முதலே சரவண பொய்கையில் நீராடி, முடிகாணிக்கை செலுத்தினர். பால்குடம் மற்றும் புஷ்ப காவடி, பன்னீர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், துலாபாரம் செலுத்தினர். மேலும், தங்க கொடி மரம் அருகே நெய் விளக்கு ஏற்றி தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
பலமணி நேரம் காத்திருத்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் முழுவதுமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வேம்புடி விநாயகர் கோயிலில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து முக்கிய சாலைகளில் ஊர்வலமாக வந்து, கந்தசுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு சரவண பொய்கை குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: குன்றத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 4 மணி முதலே கூட்டம் வர தொடங்கியது. இதையடுத்து, மலை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோயிலில் படிக்கட்டு தொடங்கி, சுமார் 2 கி.மீ., தூரத்துக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தனர். காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள குமரகோட்டம் கோயிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர்: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் காவடி சுமந்தும் வந்தனர்.
சன்மார்க்க நீதிக் கொடி: வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊரான, பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனத்தில் உள்ள சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச விழா நடைபெற்றது. இதில், வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை சார்பில் அருட்பெருஞ்ஜோதி அகவல், சன்மார்க்க நீதிக் கொடி உயர்த்துதல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூர் பகுதியில் சுத்த சன்மார்க்க சங்க வள்ளலார் கோயிலில் நடைபெற்ற 11-ம் ஆண்டு தைப்பூச விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT