Published : 12 Feb 2025 12:31 AM
Last Updated : 12 Feb 2025 12:31 AM
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 6.30 மணியளவில் அஷ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. சுவாமி அலைவாயுகந்த பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பின்னர், தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள்மாடவீதிகள், ரத வீதிகள், மூல ரதவீதியைச் சுற்றி இரவில் கோயிலை சுவாமி வந்தடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று (பிப். 12) பவுர்ணமி என்பதால், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கல்யாண உற்சவம்... அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் வீதி உலா வந்தார். தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை முதலே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநியில் திரண்டனர். பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியானில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.15 மணிக்கு மேஷ லக்கினத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலையில் விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேருக்கு முன்னால் செல்ல, ரூ.49 லட்சத்தில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நிகழ்ச்சியில், அறநிலையத் துறை இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழநி நகர் முழுவதும் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வரும் 14-ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT