Published : 11 Feb 2025 08:10 PM
Last Updated : 11 Feb 2025 08:10 PM
பழநி: பழநி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘அரோகரா’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று (பிப்.10) இரவு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் வீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) மாலை நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பழநி மலைக்கோயிலில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியானில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, காலை 11.15 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 4.45 மணிக்கு விநாயகர் மற்றும் வீரபாகு சுவாமி தேர் முன்னால் செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ரூ.49 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தேரை ‘அரோகரா’ முழகத்துடன் நான்கு ரத வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தைப்பூச விழாவையொட்டி, 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக பிப்.14-ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழாவும், இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT