Published : 11 Feb 2025 09:36 AM
Last Updated : 11 Feb 2025 09:36 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று (பிப்.11) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 6.30 மணியளவில் கடலில் சுவாமி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர், சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, கோயிலைச் சேருகிறார்.
குவிந்த பக்தர்கள்: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
திருச்செந்தூர் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT