Published : 11 Feb 2025 12:45 AM
Last Updated : 11 Feb 2025 12:45 AM

‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷத்துடன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகம். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் நன்கொடைகள் மூலம் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த பிப்.3-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி மாலை, முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அப்போது வடவாற்றில் இருந்து யானை மீது புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து 6 கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, நேற்று காலை யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டது.

தொடர்ந்து, விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அப்போது, விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் சக்தி, பராசக்தி’ என முழக்கமிட்டனர். பின்னர் கலசங்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, கோயில் உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x