Published : 07 Feb 2025 01:21 PM
Last Updated : 07 Feb 2025 01:21 PM
பழநி: பழநியில் புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது. இங்கு இன்று வெள்ளிக்கிழமை (பிப்.7) காலை உலக நன்மை வேண்டி, ஶ்ரீலஶ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் பிள்ளை முன்னிலையில் 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து, அகஸ்தியர் சித்தருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வழிபட்டு வரக்கூடிய போகர், புலிப்பாணி சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள், நவபாஷாணத்துக்கு மலர் வழிபாடு விழா நடைபெற்றது. இதில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ‘ஓம் அகஸ்தியாய நம’ என்று கோஷம் எழுப்பி, மனமுருகி வேண்டினர்.
சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள், “உலக நன்மைக்காகவும், உலக மக்களின் அமைதிக்காகவும் 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடத்துவதற்காக பழநி வந்தோம். நினைத்தப்படி யாகம் சிறப்பாக நடந்தது. எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT