Published : 07 Feb 2025 09:27 AM
Last Updated : 07 Feb 2025 09:27 AM

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்ப திருவிழா வைர தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை தெப்ப திருவிழாவின் 9-ம் நாளான நேற்று வைரத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய  சுவாமி தெய்வானையுடன் அருள்பாலித்தார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை தெப்பத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாதம் தெப்பத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இத்திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். 9-ம் நாளான நேற்று ஜிஎஸ்டி சாலையிலுள்ள தெப்பத் துக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது.

பின்னர் 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். வைரத்தேரை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் அறங் காவலர்கள் மணிச்செல்வம், ராமையா, சண்முகசுந்தரம் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

நான்கு ரத வீதிகள் வழியாக சிறிய வைரத்தேர் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவில் தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய விழாவான தெப்பத் திருவிழா இன்று (பிப். 7) காலையில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள குளத்தில் தெப்பத் தேரில் காலை 10 மணியளவிலும், இரவு 7 மணியளவில் மின்னொளி தெப்பத் தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் அறங்காவலர்கள், பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x