Published : 04 Feb 2025 04:50 PM
Last Updated : 04 Feb 2025 04:50 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு 6 கிலோ 800 கிராம் தங்கத்திலான ரூ.6 கோடி மதிப்பில் அம்மன் தங்க விக்ரகத்தை கேரள பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு பிற மாநிலங்கள், மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இங்கு வரும்போது அவர்கள் வேண்டுகிற விருப்பம் நிறைவேறுவதற்காக நேர்ச்சை செய்வது வழக்கம்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் ரவிப்பிள்ளை (61). தொழிலதிபரான இவர், கன்னியாகுமரி பகவதியம்மனின் தீவிர பக்தராவார். இவர் ஆண்டுதோறும் கோயிலுக்கு வந்து பல நேர்த்திகடன்களை செய்து வந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்திலும், தொழில் நிமித்தமாகவும் நினைத்த வேண்டுதல் நிறைவேறியதால் ரூ.6 கோடி மதிப்பிலான தேவி குமாரி (பகவதி அம்மன்) விக்ரகத்தை செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இது 6 கிலோ 800 கிராம் எடை கொண்ட தங்கத்தினால் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை அம்மனின் விக்ரகத்திற்கு பூஜை செய்து கோயிலை சுற்றி வலம் வரும் வைபவம் காலகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வெள்ளியிலான அம்மன் விக்ரகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை கோயிலுக்கு வரும்போது பார்த்த ரவிபிள்ளை தற்போது தினசரி மூன்று வேளை பூஜைக்காக அதே அளவிலான அம்மன் தங்க விக்ரகத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு மனைவி, மக்களுடன் வந்திருந்த ரவிபிள்ளை அம்மனின் தங்க விக்ரகத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அறநிலையத் துறை இணை ஆணையர் ஜான்சிராணி, உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, தொகுதி கண்காணிப்பாளர் மற்றும் கோவில் மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அம்மன் விக்ரகம் மூலஸ்தான கருவறை வாசலில் வைத்து முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கொலு மண்டபத்தில் கொண்டு வரப்பட்டு தங்க சிலையின் எடை மற்றும் அளவுகளை சரிபார்த்து பதிவு செய்தனர். சிலையை வைப்பதற்காக 3 கிலோ எடையில் வெள்ளியிலான ஆமை பீடத்தையும் பக்தர் ரவிப்பிள்ளை காணிக்கையாக வழங்கினார்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு அம்மனின் தங்க விக்ரகம் வழங்கிய நேர்த்தி கடனால் தனது வாழ்நாள் லட்சியம் நிறைவேறி பெரும் புண்ணியம் பெற்றது என கூறினார். இந்த தங்க விக்ரகத்தை கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்த கைலாஷ் குழுவினர் வடிவமைத்து கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT