Published : 31 Jan 2025 05:03 PM
Last Updated : 31 Jan 2025 05:03 PM

தி.மலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நாளை (பிப்.1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. உலகப் பிரசித்தி பெற்றதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகும்.

நினைக்க முக்தி தரும் தலம் என்பதால், உலகம் முழுவதும் இருந்து பக்தர்களின் வருகை உள்ளது. இதில், தமிழக பக்தர்களின் வருகைக்கு ‘சவால்’ விடும் வகையில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகையானது கடந்த 3 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

மாதாந்திர பவுர்ணமி நாளில் கூட, கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிட்டது. சித்ரா பவுர்ணமிக்கு 25 லட்சம் பக்தர்களும், கார்த்திகை தீப நாட்களில் 40 லட்சம் பக்தர்களும் வருகை தரும் அளவுக்கு ‘பக்தி’ அலை வீசுகிறது. பவுர்ணமி நாட்களைத் தவிர்த்து, அரசு மற்றும் வார விடுமுறை நாட்களிலும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து சென்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தற்போது வாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் (கார், வேன்) ஆகியவை வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு, பே கோபுர வீதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால், மாட வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாட வீதி வழியாக கள்ளக்குறிச்சி, சேலம், பெங்களூரு மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் நெரிசலில் சிக்கிப் பல மணி நேரம் ஸ்தம்பித்துவிடுகிறது.

இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். கோயிலுக்குச் செல்வதற்கு மாட வீதியில் நடந்து செல்லக்கூட வழியின்றி பக்தர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காணத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும் என உள்ளூர் மக்களும், அண்ணாமலையார் பக்தர்களும் வலியுறுத்தினர். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவும், ஓரிரு முறை கூடி ஆலோசித்தது.

இந்நிலையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், ஆன்மிக பூமியில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்கான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாட வீதியில் போக்குவரத்துக்கு நிரந்தர தடை விதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட முயற்சியாக, ஆட்டோ, கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு பிப்.1-ம் தேதி (நாளை) முதல் அனுமதிக்கப்படாது என ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த சோதனை முயற்சி நாளை (பிப்.1-ம் தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில் ஏற்படும் சாதக பாதகங்கள் அடிப்படையில் மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சரக்கு வாகனங்களை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இயக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு, மணலூர்பேட்டை, சேலம், தருமபுரி, செங்கம், பெங்களூரு, திருப்பத்தூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பெரியார் சிலை, திருவள்ளூவர் சிலை மற்றும் மணலூர்பேட்டை ரிங்ரோடு வழியாக மாற்றுப் பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதிலும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அண்ணா நுழைவு வாயில், ரயில் நிலைய வளாகம், காந்தி நகர் மைதானம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானம், எஸ்ஆர் ஸ்டீல் நிறுவனம் எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிலையம், சந்தைமேடு மைதானம், அந்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையங்களில் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாட வீதி மற்றும் இதனைச் சுற்றி உள்ள வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு வட்டார போக்குவரத்துத் துறை மூலமாக வழங்கப்படும் அடையாள அட்டையுடன் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டையைப் பெறும் முயற்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x