Published : 29 Jan 2025 11:27 AM
Last Updated : 29 Jan 2025 11:27 AM

தை அமாவாசை சிறப்பு வழிபாடு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 15,000+ பக்தர்கள் தரிசனம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று (ஜன.29) அதிகாலை 6 மணி முதல் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே சஞ்சீவிகிரி எனும் சதுரகிரி மலை உள்ளது. இதனால் சதுரகிரி பஞ்சபூத லிங்கத்தலம் என போற்றப்படுகிறது.

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, ஆனந்த வல்லியம்மன், பிலாவடி கருப்பசாமி, சட்டநாத முனி குகை, 18 சித்தர்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளது. இங்கு அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்கள் தவம் புரிந்துள்ளதாகவும், இன்றும் சதுரகிரி மலையில் சித்தர்கள் அரூபமாக தவம் செய்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சதுரகிரி மலைக்குச் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய 8 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சதுரகிரியில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, மகா சிவராத்திரி ஆகிய முக்கிய விழா நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற சிவ தலங்களான கேதார்நாத், அமர்நாத் போன்ற கோயில்களுக்கு செல்ல இயலாதவர்கள் தமிழகத்தில் உள்ள வெள்ளையங்கிரி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு தை அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சதுரகிரி மலை அடிவாரமான வத்திராயிருப்பு தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. நள்ளிரவு முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை நுழைவாயில் முன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பனி மூட்டம் காரணமாக காலை 6 மணிக்கு மேல் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x