Published : 28 Jan 2025 12:20 AM
Last Updated : 28 Jan 2025 12:20 AM

தைப்பூச திருவிழாவையொட்டி பழநி கோயிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து

பழநி: பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு பிப். 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழநி பழனியாண்டவர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்தாண்டு தைப்பூசத் திருவிழாவுக்கு பழநிக்கு 12 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். நடப்பு ஆண்டில் கூடுதலான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தைப்பூச திருவிழாவின் போது ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஒரு நாளைக்கு 20,000 பேர் வீதம் 20 நாட்களுக்கு மொத்தம் 4 லட்சம் பேருக்கு 2 வகையான விலையில்லா உணவு வழங்கப்பட உள்ளது. பழநி முருகன் கோயிலின் 19 உப கோயில்களிலும் இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும். இதன் மூலம் பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயில்கள் என மொத்தம் 50 கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சியாக இந்த ஆட்சி வரலாற்றில் இடம் பெறும். தைப்பூச திருவிழாவின் போது பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதை வரவேற்கிறோம். அதே சமயம், அந்த உணவால் பக்தர்களுக்கு எவ்வித உடல் உபாதையும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

பிப்.11-ம் தேதி தைப்பூசம் அன்றும், பிப்.12, 13 ஆகிய மூன்று நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரை கூட பணி நியமனம் செய்யவில்லை. திமுக ஆட்சியில் தான் 5 ஆண்டுகளாக பணிபுரிந்த 1,289 பேர் பணி வரன் முறை செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக 500 பேரை பணி வரன்முறை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழநி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக யாரேனும் மோசடியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்திட்ட வரைவில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x