Published : 27 Jan 2025 06:25 PM
Last Updated : 27 Jan 2025 06:25 PM
நாகர்கோவில்: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் 11 நாள் தைத்திருவிழா கடந்த 17-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிறைவு நாளான இன்று மதியம் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் நடைபெற்றது.
தலைமை குரு பால பிரஜாபதிஅடிகளார் தலைமையில் தொடங்கிய தேரோட்ட நிகழ்ச்சிக்கு குருமார்கள் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அப்போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருள் படைத்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT