Published : 25 Jan 2025 06:14 AM
Last Updated : 25 Jan 2025 06:14 AM
வரும் பிப்ரவரி 4-ம் தேதி திருமலையில் ரதசப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேரில் ஆய்வு செய்தார்.
ஆந்திர மாநிலம் திருமலையில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி ரதசப்தமி விழாவை வெகு சிறப்பாக கொண்டாட தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தலைமையில் அனைத்து தேவஸ்தான துறை உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாட வீதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரதசப்தமியை மினி பிரம்மோற்சவம் என்றும் திருமலையில் அழைக்கின்றனர். ஏனென்றால், அன்று உற்சவரான மலையப்பர் 7 வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் பவனி வந்து அருள் பாலிப்பார், இதனை தொடர்ந்து, 9-10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11-12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம்1-2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதனை தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 - 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் விடுதிகளுக்கு ஆன்மிக பெயர்கள்: திருமலையில் தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் தேவஸ்தானத்துக்கு விடுதிகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்த விடுதிகளுக்கு அவர்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன. ஆனால், இனி அந்த விடுதிகளுக்கு ஆன்மிக பெயர்கள், பெருமாள், தாயார் பெயர்களை சூட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, முதன்முதலாக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான பிரசாந்திக்கு சொந்தமான விசிஆர் விடுதிக்கு லட்சுமி பவன் என பெயர் சூட்டப்பட்டது.
திருமலைக்கு தனியாருக்கு சொந்தமான 45 விடுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துக்கும் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT