Last Updated : 23 Jan, 2025 09:09 PM

 

Published : 23 Jan 2025 09:09 PM
Last Updated : 23 Jan 2025 09:09 PM

ரோப்கார் வந்ததும் சபரிமலையில் டோலி சேவை ரத்து: அமைச்சர் தகவல்

கோப்புப்படம்

தேனி: சபரிமலையில் ரோப்கார் பயன்பாட்டுக்கு வந்ததும் டோலி மூலம் பக்தர்களை தூக்கிச் செல்லும் முறை ரத்து செய்யப்படும் என்று தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் முடிவடைந்து கடந்த 20-ம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், சபரிமலையில் பணிபுரிந்த அரசு துறையினருக்கு திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது:

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து திரும்பி உள்ளனர். மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 10 லட்சம் அதிகமாகும்.

மண்டல, மகரவிளக்கு காலத்தில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.440 கோடியாகும். கடந்த ஆண்டு ரூ.360 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டை விட ரூ.80 கோடிக்கு மேல் அதிக வருமானம் கிடைத்துள்ளது. சபரிமலைக்கு ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ரூ.250 கோடி மதிப்பிலான இத்திட்டம் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும்.

பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வது தான் ரோப் காரின் முக்கிய நோக்கம். இருப்பினும் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் இதில் செல்ல அனுமதிக்கப்படுவர். இதன் தூரம் 2.7 கிமீ ஆகும். ஒன்றரை வருடத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரோப் கார் செயல்பாட்டுக்கு வந்தால் டிராக்டர்களில் சரக்குகள் கொண்டு செல்வது மற்றும் டோலியில் ஆட்களை கொண்டு செல்வது நிறுத்தப்படும். டோலி தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x