Published : 21 Jan 2025 05:54 AM
Last Updated : 21 Jan 2025 05:54 AM
சென்னை / பெங்களூரு: சமூக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்துக்காக, தன்னலம் கருதாமல் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது அருளுரையில் கூறியுள்ளார்.
அகில கர்நாடக பிராமண மகாசபாவின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பெங்களூரு நகர் பெல்லாரி சாலையில் உள்ள பேலஸ் மைதானத்தில், பிராமண மகா சம்மேளனம், கடந்த 18, 19-ம் தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, கடந்த 17-ம் தேதி மாலை காயத்ரி மகா யாக கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காயத்ரி ஜபம் தொடங்கியது.
ஜன. 18-ம் தேதி காலை நடைபெற்ற காயத்ரி மகா யாகத்தில் சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சார்யா ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் பங்கேற்று அனுக்கிரகபாஷணம் அருளினார். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் ஜெயராம் கட்கரி, பிரகலாத் ஜோஷி, ஹெச்.டி.குமாரசாமி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜன. 19-ம் தேதி மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இணையவழியில் அனுக்கிரகபாஷணம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: யாகம் வளர்த்து பூஜைகள் செய்வதால் எண்ணம் தூய்மை பெறுகிறது. கல்வி வளர்ச்சி, வேதம் பயிலுதல் உள்ளிட்டவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோயில்களில் விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சமூக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்துக்காக, தன்னலம் கருதாமல் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகாசபாவின் தலைவர் அசோகா ஹரணஹல்லி, பொதுச்செயலாளர் எஸ்.ஸ்ரீதர்மூர்த்தி, பொருளாளர் வெங்கடேஷ் எஸ்.நாயக் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT