Published : 20 Jan 2025 07:46 PM
Last Updated : 20 Jan 2025 07:46 PM
மதுரை: மதுரையில் தெப்பத் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று (ஜன.20) நடந்தது. இதைத்தொடர்ந்து விழாவுக்கான பணிகள் தொடங்கியது.
மதுரையில் தைப்பூசத் தெப்பத் திருவிழா ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.11 வரையிலும் நடக்கிறது. இதையொட்டி, மீனாட்சி - சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன், காலை , மாலையில் கோயிலை சுற்றிலும் நான்கு சித்திரை வீதிகளிலும் புறப்பாடாகி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பா். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 5, மற்றும் 6ம் தேதிகளில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 7-ம் தேதி விழாவின் 8-ம் திருநாள் மச்சகந்தியார் திருமணக் காட்சியும், 8-ம் தேதி விழாவின் 9-ம் நாள் நிகழ்வாக இரவு சப்தாவரணமும், 9-ம் தேதியன்று 10-ம் திருநாள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வும், 10-ம் தேதியன்று 11-ம் திருநாள் கதிரறுப்பு நிகழ்வும், 11-ம் தேதி 12-ஆம் திருநாளாக தெப்ப உற்சவமும் விமர்சையாக நடைபெறவுள்ளது.
11-ம் தேதி தெப்ப உற்சவத்தையொட்டி, அதிகாலையில் மீனாட்சி - சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து புறப்பாடாகி, மாரியம்மன் தெப்பக்குளம் செல்கின்றனர். அங்கு அலங்கரித்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தெப்பம் சேவார்த்திகளால் வடம் பிடித்து, காலையில் இரண்டு முறை சுற்றி வந்தபின், மாலையில் தெப்பக்குள மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்தி தீபாராதனை நடைபெறுகிறது. மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி இரவில் ஒரு முறையும் தெப்பம் சுற்றி வரும்.
தெப்பத் திருவிழா நாளில் பக்தர்களுக்கென கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும். உள்ளே வருவோர் வடக்கு கோபுரம் வாசல் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், தைப்பூச தெப்பத் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடந்தது.
முக்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க தெப்பகுளத்திலுள்ள தூணில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் , பக்தர்கள் பங்கேற்றனர். முகூர்த்தக்கால் நடும் விழாவை தொடர்ந்து தெப்பத் திருவிழாவுக்கான பணிகளும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT