Last Updated : 20 Jan, 2025 04:40 PM

 

Published : 20 Jan 2025 04:40 PM
Last Updated : 20 Jan 2025 04:40 PM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு வழிபாடுகள் நிறைவு: பிப்.12-ல் மீண்டும் நடை திறப்பு

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலையில் நடை சாத்தப்பட்டது. அடுத்ததாக பிப்.12-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 41 நாள் தொடர் வழிபாடுகளுக்குப் பின்பு டிச.26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்பு நடை சாத்தப்பட்டு மகரவிளக்கு பூஜைக்காக டிச.30-ல் கோயில் திறக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி உச்சநிகழ்வான மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.

அன்று ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர், பின்பு மகரசங்கராந்தி வழிபாடுகள் நடைபெற்றன. மகரவிளக்கு வழிபாடுகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் நேற்று (ஜன.19) இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி நேற்று தரிசனம் முடித்த பக்தர்கள் அனைவரும் இரவில் சபரிமலையில் இருந்து பம்பைக்குத் திரும்பினர்.

மண்டல பூஜை நிறைவடைந்து பக்தர்கள் கிளம்பிச் சென்ற பிறகு பந்தளம் ராஜ வம்ச பிரநிதிநிகளின் பிரத்யேக தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்பின்பே கோயில் நடை சாத்தப்படும். இதற்கான நடைமுறை இன்று (திங்கள்) காலை தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜவம்ச பிரநிதிகளின் தரிசனம் நடைபெற்றது. பின்பு ஐயப்பன் அணிந்திருந்த திருவாபரணம் எடுக்கப்பட்டு திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிவித்து யோகநிலையில் ஐயப்பன் நிலைநிறுத்தப்பட்டார்.

பின்பு ஹரிவராசனம் தாலாட்டுப் பாடலுடன் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை சாத்தினார். இதனைத் தொடர்ந்து குழுவினர் திருவாபரணப் பெட்டியை 18-ம் படி வழியே தலைச்சுமையாககொண்டு சென்றனர். தொடர்ந்து சாவி கோயில்நிர்வாக அதிகாரி விஜூநாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாத பூஜைக்கான பண முடிப்புகளும் வழங்கப்பட்டன.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரணம் அடங்கிய பெட்டி வரும் 23-ம் தேதி பந்தளம் அரண்மனையைச் சென்றடைய உள்ளது. இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக மாதாந்திர பூஜைக்காக பிப்.12-ம் தேதி மாலை நடை திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x