Last Updated : 20 Jan, 2025 04:14 PM

 

Published : 20 Jan 2025 04:14 PM
Last Updated : 20 Jan 2025 04:14 PM

கோவை - பேரூரில் ரூ.12 கோடியிலான தர்ப்பண மண்டபம் பிப்.8-ல் திறப்பு

பேரூரில் கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தில் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன் |

கோவை: நவக்கிரக தூண்கள், 50 மண்டபங்கள் உள்ளிட்டவற்றுடன் பேரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி பயன் பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பேரூரில் புகழ்பெற்ற பட்டீசுவரர் கோயிலில் கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளில் கோயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இக்கோயிலுக்கு அடுத்துள்ள பேரூர் நொய்யலாற்றின் படித்துறையில், திதி, தர்ப்பணம் கொடுத்து முன்னோருக்கு வழிபாடு நடத்துவது பொதுமக்களின் வழக்கம். ஆடி, புரட்டாசி, தை உள்ளிட்ட முக்கிய மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் படித்துறையில், அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இப்பகுதியில் தர்ப்பண மண்டபம் கட்ட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் பேரூர் கோயில் அருகே பட்டீசுவரர் கோயிலுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் பரப்பிலான இடத்தில் ரூ.12 கோடி மதிப்பில் தர்ப்பண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 10-ம் தேதி தர்ப்பண மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தர்ப்பண மண்டப வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நவக்கிரக தூண்கள்.

இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பேரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தில் ஒரே அளவில் மொத்தம் 50 மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. தரைதள பணிகள், ஓவியம் வரைதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களுக்கான கழிப்பறை, காத்திருக்கும் இடம், பசு மடம், வாகனம் நிறுத்தும் இடம், படையல் வைக்கும் இடம் என தர்ப்பணம் கொடுக்க தேவையான மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நவக்கிரகங்களை குறிக்கும் வகையில் மண்டப வளாகத்தில் 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 10-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே தர்ப்பண மண்டபமும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x