Published : 16 Jan 2025 03:13 PM
Last Updated : 16 Jan 2025 03:13 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலின் பார்வேட்டை உற்சவமாக, குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இன்று (ஜன.16) தலசயன பெருமாள் எழுந்தருளினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், காணும் பொங்கல் நாளில் பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கும்பாபிஷேகம் திருப்பணிகள் நடைபெற்றதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பார் வேட்டை உற்சவம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால், மீண்டும் வழக்கம்போல் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்பேரில், இந்தாண்டு தலசயன பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்சவம் இன்று நடைபெற்றது.
இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய தலசயன பெருமாள், குழிப்பாந்தண்டலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு இன்று அதிகாலை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இதில், பூஞ்சேரி, பெருமாளேரி, நல்லான் பிள்ளை பெற்றாள், குச்சிக்காடு, காரணை ஆகிய கிராமங்களில் சாலையோரம் மக்கள் திரண்டிருந்து பெருமாளை வழிபட்டனர். இதையடுத்து, லட்சுமி நாராயண பெருமாள் கோயிலை அடைந்த தலசயன பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், பார் வேட்டை உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செல்வக்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT