Published : 15 Jan 2025 03:02 PM
Last Updated : 15 Jan 2025 03:02 PM
இளமை என்றாலே உடல் வலிமை, புத்துணர்வு, ஊக்கசக்தி போன்றவற்றை நினைவுபடுத்தும். பொதுவாக 18 முதல் 30 வயதுள்ளவரை இளைஞர் என்று வகைப்படுத்துவதுண்டு. இந்த இளமை என்பதை ஓர் ஆறு மலைகளிலிருந்து உற்பத்தியாகி பள்ளத்தாக்குகளில் பயணித்து சமவெளிக்குள் நுழைகின்ற தருணத்தை நினைவு கூரலாம். இந்தக் காலக்கட்டத்தில் தான் அவர்கள் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வை பெறுகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதற்குத் தயார்படுத்திக்கொள்வதற்கான பருவம் இது. வாழ்க்கை என்பது எதனை உள்வாங்கி, கிரகித்து செயல்படுத்துகிறோமோ அதுவாக ஆகிறது.
சுவாமி விவேகானந்தரிடம் ராஜா ஹரிசிங், "வாழ்க்கை என்றால் என்ன?" என்று கேட்ட கேள்விக்கு, "தன்னை அழுத்தி வைக்க முயலும் சூழ்நிலைகளின் கீழுள்ள ஒரு ஜீவன் தன்னை விளங்கிக் கொள்வதும் விரித்துக்கொள்வதும் வாழ்க்கை" என்று பதிலளித்தார்.
ஓர் இளைஞன் ஒரு செல்வந்தருக்கு மகனாக இருந்தாலும் வேண்டிய அறிவும் செயல்திறனும் இல்லாவிட்டால் அவனது வாழ்வே வீணாகிவிடும். இந்த அறிவும் செயல்திறனும் ஓர் ஏழை இளைஞனிடம் இருந்தால் தனக்கு எத்தகைய சூழல்கள் இருந்தாலும் அதை எதிர்கொண்டு சொந்தக்காலில் நின்று வாழ்வில் எதிர்நீச்சல் போடுவான்.
திறந்த மனத்துடன் கவனத்துடன் இவ்வுலகைப் படிக்கையில் அறிவும் செயல்திறனும் மெல்ல மெல்ல வெளிப்படும். 'இவ்வுலகில் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கின்றன. இதை வைத்துதான் உலகியல் விளையாட்டுக்கள் நடக்கின்றன. தேர்ந்தெடுப்பது உன் கையில்' என்பார் அன்னை ஸ்ரீசாரதாதேவி.
ஒருவர், தான் தேர்ந்தெடுக்கும் விஷயத்திற்கு ஏற்ப நல்லவராகவோ கெட்டவராகவோ உருமாறுகின்றார். இங்கே தேர்ந்தெடுப்பது என்பது கற்றல் அதாவது உள்வாங்கி வெளிப்படுத்துதல் என்பதாகும்.
அதனால்தான் திருவள்ளுவர்,
'கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக' என்றார்.
கற்க வேண்டியவற்றை கற்கவேண்டும். பிறகு அதற்கேற்ப வாழ வேண்டும். தினசரி மனிதர்கள் எல்லோரும் ஏதோஒரு விஷயத்தை ஏதோஒரு விதத்தில் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது நல்லநூல்களாக இருக்கலாம். அல்லது வெறுப்புணர்ச்சி தூண்டுகின்ற நூல்களாக இருக்கலாம். காணுகின்ற ஊடகங்களில் நல்லதோ கெட்டதோ அதை கவனித்து உள்வாங்கிக் கொள்ளலாம். இவ்விதம் படிப்பதன் மூலமாக; காண்பதின் மூலமாக; உரையாடல்கள் மூலமாக; பழகுவதன் மூலமாக; சிந்திப்பதன் மூலமாக ஒருவன் அறிவை வளர்க்கின்றான்.
மக்கள் எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் எவரைப் பற்றி படித்தால்; சிந்தித்தால்; பிறகு அவர் சொன்னவற்றைக் கடைப்பிடித்தால் உன்னதமாகலாம்? தெள்ளத்தெளிவாக சுவாமி விவேகானந்தரைக் குறிப்பிடலாம். ஏன்அவரை அறிந்துகொள்ள வேண்டும்?
சுவாமி விவேகானந்தர் தம் சீடர் சரத் சந்திர சக்கரவர்த்தியிடம் ஒரு முறை கூறினார்: 'உலக வரலாற்றைப் படித்துப் பார். ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட காலத்தில் ஒரு மகாபுருஷர் நடுநாயமாக இருப்பதைக் காண்பாய். அவரது கருத்துக்களால் கவரப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உலகிற்கு நன்மை செய்வார்கள். நீங்கள் எல்லாம் புத்திசாலி இளைஞர்கள்; நீண்ட நாட்களாக இங்கு வருகிறீர்கள். இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்? சொல்லுங்கள். இந்த ஒரு பிறவியையாவது பிறரது சேவைக்காகப் பயன்படுத்தக் கூடாதா? அப்படிச் செய்தால் நீ இங்கு வந்தது வீண்போகவில்லை என்பதை நான் உணர்வேன்.'
தற்கால மகாபுருஷர் சுவாமி விவேகானந்தரே இந்தக் காலத்தின் மகாபுருஷர். ஏனென்றால் தற்காலத்தின் பிரச்னைகளை அவர் அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் பணி என்ன?
நம்முடைய சிற்றறிவு நோக்கிலே பார்க்கும்போது இரண்டு மகத்தான செயல்களை அவர் ஆற்றியிருக்கிறார். ஒன்று நமது தேசத்திற்கு வந்த துன்பத்தைப் போக்கியிருக்கிறார். மற்றது, மேல்நாட்டில் காணப்படும் உலகாயதப் போக்கிற்கு மாற்றாக ஆன்மிகம் என்ற லட்சியத்தை முன் வைத்தார். அந்த லட்சியத்தின்படி வாழ்ந்தால் மனித குலத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்பதை மேல்நாடுகளுக்கு எடுத்துக் காட்டினார்.
சுவாமி விவேகானந்தர் காலத்தில் நிலவிய கல்வியின் தாக்கத்தால், இளைஞர்களின் நிலை பரிதாபமாக மாறிவிட்டது. அத்துடன் தேசத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த குறுநில மன்னர்கள் வலிமையற்றவர்களாகவும் தேசப்பற்று இல்லாதவர்களாகவும் புலனின்பங்களுக்கு அடிமைகளாகவும் இருந்தார்கள்.
இந்தக் காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அரிய ஆன்மிக ஞானத்தைப் பெற்று இந்தியா முழுவதும் பரிவ்ராஜகராக வலம் வந்தார். அவரது பிறப்பும் வாழ்வும் சாதாரணமாக ஒரு மனிதன் பிறந்து ஆன்மிகச் சாதனைகள் செய்து முக்தி அடைவது போன்றது அல்ல.
சுவாமி விவேகானந்தரைப் போன்ற மகான்கள் மனிதர்களுக்குத் தெய்விகத்தை உணர்த்தவே இறைநிலையிலிருந்து கீழ் இறங்கி இவ்வுலகிற்கு வருகிறார்கள். சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் வலம் வந்தபோது இந்தியர்களுடைய அவல நிலையைக் கண்டு மிகவும் வாடினார்.
ஏனெனில் அவர்கள் தங்களது தனித்தன்மையை இழந்து விட்டிருந்தார்கள். அவர்களிடத்தில் தன்னம்பிக்கை இல்லை. ஆங்கிலேயரிடத்தில் அடிமைப்பட்டதோடு அல்லாமல் தங்கள் மதத்தின் உண்மைகளை அறிந்துகொள்ளாத அவல நிலையில் இருந்தார்கள்.
அக்காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் தமது எழுச்சிமிக்க உரைகளை ஆற்றியிருந்தால் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகம். எனவேதான் சுவாமி விவேகானந்தர் பிரமததாசரிடம் கூறுகிறார்: 'இப்போது நான் காசியிலிருந்து புறப்படுகிறேன். சமுதாயத்தின் மீது ஒரு நாள் வெடிகுண்டு போல் வெடிப்பேன்; அப்போது இந்தச் சமுதாயம் ஒரு நாயைப் போல் என்னைப் பின் தொடரும்.'
இதன் பிறகு சுவாமி விவேகானந்தர் தமது பரிவ்ராஜக வாழ்க்கையை முடித்து மேலைநாட்டில் போகத்தில் உழன்ற மாந்தர்களிடம் இந்தியாவின் உன்னத ஆன்மிகச் செய்தியைப் பரப்பச் சென்றார். தனியொரு மனிதராகவே, காலங்காலமாக நிலைக்கக்கூடிய மகத்தான செயலை அவர் நிகழ்த்தினார். பின் இந்தியா திரும்பி, தமது அனல்கக்கும் சொற்பொழிவுகளால் தேசபக்தியைப் புகுத்தினார். ஆன்மிகத்தை விழிப்புறச் செய்தார்.
சுவாமி விவேகானந்தர் காட்டும் லட்சியம்: சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: 'மனித இனத்திற்கு அவர்களுடைய தெய்விகத்தைப் போதிப்பதே என் லட்சியம். வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.'
'உறங்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்புங்கள். அதனால் சக்தி கிடைக்கும், பெருமை கிடைக்கும், நன்மை கிடைக்கும், தூய்மை கிடைக்கும். இன்னும் என்னென்ன மேலானவையோ அவை யாவும் உங்களுக்குக் கிடைக்கும்.'
இந்த ஆன்மாவை நம்முள் இருந்து எழுப்ப வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு அவர் நான்கு யோகங்களைப் போதித்திருக்கிறார். கர்மயோகம், பக்தி யோகம், ஞானயோகம், ராஜயோகம் -' இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ எல்லாவற்றையுமோ பழகி சுதந்திரராக ஆகுங்கள்.... உங்களுக்குள் இருக்கிற அந்தப் பரமாத்மாவை வெளிப்படுத்துங்கள். அதுவே லட்சியம்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
தன்னலமற்ற சேவையின் மகத்துவம்: இந்த நிலையை அடைய இன்னொரு வழி இருக்கிறது. அதனை சுவாமி விவேகானந்தர் மிகவும் வலியுறுத்துகிறார். சொந்த முக்திக்காகப் பாடுபடும் அதே நேரத்தில் உலக நன்மைக்காகவும் பாடுபட வேண்டும். ஏனெனில் ஆன்மிகச் சாதனைக்கு மனத்தூய்மை மிக அவசியம்.
அத்தகைய தூய்மையைப் பெற, தன்னலமற்ற சேவை ஆற்ற வேண்டும். அதனால் மனம் ஆசைகளிலிருந்தும் பலனில் பற்று வைப்பதிலிருந்தும் விடுபடும். மெல்ல மெல்லக் கர்மங்களை இறைவனுக்காகவே செய்யும் நிலை உண்டாகும். பிறகு படிப்படியாக ஒருவர், உடம்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, ஆன்மாவில் ஒன்றுபடுத்திக் கொள்ளும் பக்குவத்தைப் பெறுவார்.
சுவாமி துரியானந்தரிடம் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: 'ஹரி, நான் இப்போது ஒரு புதிய பாதையைக் காட்டியிருக்கிறேன். இதுவரை தியானம், ஜபம், ஆன்ம ஆராய்ச்சி இத்தகைய பாதையில் சென்றால்தான் அனுபூதி கிடைக்கும் என்கிற கருத்து இருந்திருக்கிறது. ஆனால் இப்போது ஆண்களும் பெண்களும் தன்னலமற்றுக் கடவுளுக்காகத் தொண்டாற்றுவதன் மூலம் அவர்கள் ஜீவன் முக்தர்களாக ஆவார்கள்.'
அத்தகைய ஒரு பாதையைக் காட்டியதோடு மட்டுமல்லாமல், ஆற்றலையும் அவர் கொடுத்துள்ளார். அதையும் துரியானந்தரிடம் சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்: 'இன்னும் வருகின்ற 200 ஆண்டுகளுக்கு யாரும் எதுவும் செய்யத் தேவையில்லை. வெறுமனே வாலைப் பிடித்துக் கொண்டிருந்தாலே போதும். அப்படியோர் உத்வேகத்தை நான் தந்திருக்கிறேன்.'
சுவாமி விவேகானந்தர் காட்டும் வழியைப் பின்பற்றுவது எப்படி?: சுவாமி விவேகானந்தர், ஜி.ஜி நரசிம்மாச்சாரியாருக்கு எழுதிய கடிதத்தில்,' உங்களுக்கு விருப்பம் இருந்தால், மனப்பூர்வமாக, சிறிதும் சுயநலமின்றி, அனைத்திற்கும் மேலாக பரிபூரணமான தூய்மையுடன் இருப்பதன் மூலம் என்னைப் பின்தொடருங்கள். என் ஆசிகள் உங்களைத் தொடரும்' என்ற அறைகூவல் விடுக்கிறார்.
இவற்றை யாரெல்லாம் கடைபிடிக்கிறார்களோ, அவர்கள் நிச்சயம் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றுகிறார்கள். சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றுவதன் சிறப்பு இத்தகைய குணங்களின் மூலம் அவர்களிடத்தில் வெளிப்படும்.
சுவாமி விவேகானந்தர் நம்மிடம் எதிர்பார்ப்பது: சுவாமி விவேகானந்தர் நம்மிடம் நிறையவே எதிர்பார்க்கிறார். அதில் சிலவற்றை அவரது கடிதங்களிலிருந்து காணலாம்: 'வாருங்கள்! முதலில் மனிதர்கள் ஆகுங்கள்! மனிதனை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்கள் நாட்டை நேசிக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள்....'
'ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள்... இறைவனின் திருவடிகளில் உங்கள் அந்தராத்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். பாடுபடுங்கள்! பாடுபடுங்கள்!...'
'உனது மனவசியத்திலிருந்து விடுபடு. உனக்குள்ளிருக்கிற அந்த எல்லையற்ற ஆற்றலாகிய சிங்கம் கிளர்ந்து எழும்...'
'சகோதரா, அளசிங்கா, சுறுசுறுப்பாக இரு. தைரியமாக இரு. இந்தியாவில் நாம் பெரும் செயல்களைச் செய்து முடிக்க இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கிறோம். நம்புங்கள். நாம் செய்தே தீர வேண்டும். '
'ஏழைகளான, வெறுத்துத் தள்ளப்பட்ட, பிறருக்காக உண்மையாக உணர்கின்ற நாம்தான் அதைச் செய்வோம். மன்னர்களோ மந்திரிகளோ பெரிய காரியங்களைச் செய்வது அபூர்வம்.'
' உங்களிடத்தில் தன்னலம் வந்து சேரவில்லை. பெயர், புகழ், பண ஆசை, போகம் போன்றவற்றின் அடிமைத்தனம் போன்றவை உங்களிடம் வருவதற்கு முன்பு நீங்கள் மகத்தான காரியத்தில் உங்களை அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள்.'
சேவை என்பது சுலபமல்ல!: மகத்தான காரியம் என்பது பகவானின் காரியம், சுவாமி விவேகானந்தரின் காரியம். அவற்றைச் செய்கையில் தேகாத்ம புத்தி ஒழிய வேண்டும். அதற்கு, நான், எனது என்கிற அகங்கார, மமகாரங்கள் நீங்க வேண்டும். ஒரு குருவிடம் சீடனாக வேண்டும். அந்தக் காலத்தில் குருகுல வழிமுறை இருந்தது. குருகுலத்தில் சேர்ந்து, குரு சொல்வதை முற்றிலுமாகக் கடைப்பிடித்து வாழும் நிலை தற்காலத்தில் அரிது.
ஆகவே நம்மிடத்தில் இருக்கிற அந்த அகங்கார மமகார வாசனைகளை நீக்கிக் கொள்வதற்கு ஓர் அற்புத வழி தொண்டாற்றுவது. இதனால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரலாம். நேர்மையான வழியில் அவற்றை வெல்வதன் மூலம் மாமனிதர்கள் ஆகலாம். இதனை சுவாமி ராமகிருஷ்ணானந்தர், அளசிங்கப் பெருமாள், ஏக்நாத் ரானடே போன்றோர் வாழ்வில் தெளிவாகக் காணலாம். அந்தப் பிரச்னைகள் உண்மையில் சுவாமி விவேகானந்தரின் ஆசீர்வாதங்கள். அது எப்படி?
இப்படிப் பிரச்சினைகள், துன்பங்கள், தொல்லைகள் வரும்போது, நம்முள் இருக்கும் சக்தி விழிப்புணர்வு பெறும்.
பிரச்னைகள் எதற்காக வருகின்றன? வீரர்களாக ஆவதற்கு. வீரர்களால்தான் இந்த உலகம் அனுபவிக்கப்படுகிறது. கோழைத்தனத்தை உதறித் தள்ளு. அவர்களால் எந்தவிதமான காரியத்தையும் ஆற்ற முடியாது என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு.
ஒருவரிடம் கத்திச் சண்டை போட்டு அவரைக் கொல்வதில் வீரமில்லை. இந்தச் சமுதாயத்தில் இருக்கின்ற இத்தனை பிரச்னைகளுக்கிடையில் தன்னலமற்றிருப்பேன். சத்தியத்தைக் கடைபிடிப்பேன். சேவையாற்றுவேன். ஆன்மாவில் நிலைபெறுவேன். தெய்வத்தைச் சார்ந்தே வாழ்வேன் என்ற உறுதி நிலையைப் பெறவே இவ்வளவு பிரச்சினைகள்.
ஒரு போர்வீரனைப் போன்று நாம், நம் சமுதாயத்திலுள்ள துன்பங்களையும், துயரங்களையும் எதிர்கொண்டு செல்ல வேண்டும். அப்படி முன்னேறிச் செல்லும்போது சுவாமி விவேகானந்தரின் ஆற்றல் ஒவ்வொருவருக்கும் வந்து சேர்கிறது.
இதுவே சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றுபவர்களின் சிறப்பு.
சேவை புரிபவர்களிடம் சுவாமி விவேகானந்தரின் ஆற்றல்: சுவாமி விவேகானந்தரின் ஆற்றல் ஒருவருக்கு வரும் என்பதை அவர் தமது சீடர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறியலாம். 'சாகும் வரைக்கும் வேலை செய்யுங்கள். நான் மறைந்த பிறகும் என் ஆன்மா உங்களிடத்தில் வேலை செய்யும்.'
சுவாமி விவேகானந்தரின் ஆற்றல் மூலம் ஒரு செயலில் வெற்றி பெற்றால், அது எனது திறமையால், செல்வாக்கால் பெற்ற வெற்றி அல்ல. முற்றிலும் தெய்வத்தின் அருளால் பெற்ற வெற்றி என்ற ஒரு நம்பிக்கையும் ஆசையற்ற தன்மையும் ஒருவருக்கு வரும். அதனால் அத்தகையவர் உன்னத நிலையை ஒருவர் அடைகிறார்.
இத்தகைய உன்னதமானவர்களால் நம்முடைய தேசம் உன்னத நிலையை அடையும். எனவேதான் தற்கால இளைஞர்களுக்கு அவசியத் தேவையாக சுவாமி விவேகானந்தர் விளங்குகிறார்.
- கட்டுரையாளர்: சுவாமி அபவர்கானந்தர், ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT