Published : 29 Dec 2024 03:23 AM
Last Updated : 29 Dec 2024 03:23 AM

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்ட அறிவிப்பு

தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ், ஐஏஎஸ்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், கண்டிப்பாக தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் வைத்திருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் நிறை, குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சியாமள ராவ் பங்கேற்றார். இதில் பக்தர்கள் பல கேள்விகளை கேட்டனர். ஹைதராபாத்தை சேர்ந்த முரளி என்பவர் கேட்கும்போது, தற்போது லட்டு பிரசாதம் ஈரமாக உள்ளதால் உதிர்ந்து போய் விடுகிறது என குறிப்பிட்டார். லட்டுவின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் தரமான நெய் உபயோகப்படுத்தப்படுவதால் அப்படி உள்ளது. உங்கள் சந்தேகம் குறித்து ஆய்வு செய்யப்படும் என நிர்வாக அதிகாரி சியாமள ராவ் பதிலளித்தார்.

அதன் பின்னர், சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் ஜனவரி 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் வரை, அதாவது 19-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் நீடிக்கும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஆன்லைன் மூலம் கடந்த 24-ம் தேதி 1.40 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டன.

தினமும் 2,000 வீதம் 10 நாட்களுக்கு 20 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் கடந்த 23-ம்தேதியே ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன.

இவர்கள் அனைவருக்கும் மகாலகு தரிசனம் மூலம் தரிசன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் திருப்பதியில் 8 இடங்களில் 87 மையங்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படும். இதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

முதியோர், மாற்று திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர், ராணுவ வீரர்களுக்கென உள்ள சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் மேற்கண்ட 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.

சிபாரிசு கடிதங்களும் ஏற்க்கப்பட மாட்டாது. திருமலையில் தங்கும் அறைகள் கிடைக்காவிடில், திருப்பதியில் பக்தர்கள் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜனவரி 7-ம் தேதி கோயிலில் அங்குரார்பன நிகழ்ச்சி நடைபெறும். வைகுண்ட ஏகாதசியான ஜனவரி 10-ம் தேதி காலை 9-11 மணி வரை திருமலையில் தங்க தேரோட்டம் நடைபெறும். மறுநாள் துவாதசியன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும்" என சியாமள ராவ் தெரிவித்தார்.

நவம்பரில் 20 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்: கடந்த நவம்பர் மாதம் மட்டும் திருப்பதி ஏழுமலையானை 20 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 7.31 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ரூ.111 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். 97 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 19.74 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னபிரசாதம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x