Last Updated : 27 Dec, 2024 06:30 AM

 

Published : 27 Dec 2024 06:30 AM
Last Updated : 27 Dec 2024 06:30 AM

ராமபிரானின் அருள் பெறுவோம்! | மார்கழி மகா உற்சவம் 12

கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி |
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர ||
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! |
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் ||
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற |
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் ||
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம் |
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்! ||

(திருப்பாவை 12)

அதிகாலை வேளையில் எருமைகள் பால் சொரிந்து ஆண்டாளின் தோழியின் வீட்டு வாசல் சேறாகி விட்டது. அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத, தோழிகள், வெளியில் இருந்தபடியே, “கொட்டும் பனியில் உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம்.

ஆயர்பாடியில் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன் இந்தப் பேருறக்கம்?” என்று கேட்கின்றனர். “கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய அதிகாலையில் எழுந்து அவன் புகழைப் பாடுவோம்” என்று உறங்கும் தோழியை கோதையின் தோழிகள் அழைக்கின்றனர்.

சிவநாமத்தை எப்போதும் உச்சரித்து மகிழ்வோம்!

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் |
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் ||
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் |
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி |\
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள் |
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப ||
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் |
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய் ||

(திருவெம்பாவை 12)

தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவித் துன்பம் இனி வராமல் தடுப்பதற்கு நாம் சிவபெருமானை வழிபட வேண்டும். ‘ஓம் நமசிவாய’ என்று அவன் நாமத்தைச் சொல்ல வேண்டும். கங்கையை தலையில் கொண்டவன். தில்லையில் கையில் அக்னியில் நடனமாடும் கலைஞன்.

வானம், பூமி, பிற உலகங்கள் அனைத்தையும் காத்து, படைத்து, அழிக்கும் தன்மை கொண்டவன். நம் கரங்களில் உள்ள வளையல்கள் ஒலி எழுப்பவும், இடுப்பில் உள்ள ஆபரணங்கள் பேரொலி எழுப்பவும், பூக்களை உடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, நாம் அவன் பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம் என்று தோழியர் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதைப் போல் இப்பாடலை எழுதியுள்ளார் மாணிக்கவாசகர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x