Published : 26 Dec 2024 03:25 PM
Last Updated : 26 Dec 2024 03:25 PM
சென்னை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, டிச.11-ம் தேதி தொடங்கி பிப்.26ம் தேதி வரை 2 மாத காலம் ஈஷா யோக மையத்தின் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளது. சென்னையில் வரும் டிச.30 முதல் ஜன.10 வரை ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் ரத யாத்திரை நடைபெறும், என்று தென் கைலாய பக்தி பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை ஈஷா யோக மையத்தின் 31-வது மஹா சிவராத்திரி விழா வரும் பிப்.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென் கைலாய பக்தி பேரவையின் சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன், சீனிவாசன், இந்து ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஈஷாவில் நடைபெறவுள்ள மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிச.11-ம் தேதி கோவையில் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்கும் ரத யாத்திரையை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் கடந்த டிச.22-ம் தேதி தொடங்கி வைத்தனர். இந்த ரதங்கள் மஹா சிவராத்தி வரையுள்ள 2 மாத காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கிமீ பயணிக்க உள்ளன. சென்னையில் வரும் டிச.30 முதல் ஜன.10 வரை ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் ரத யாத்திரை நடைபெறும்.
இதேபோல் தமிழகம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சிவாங்கா பக்தர்களால் ஆதியோகி திருவுருவம் தாங்கிய 6 தேர்களும் ஈஷாவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இத்துடன் 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தாங்கிய ஒரு தேரும் பாத யாத்திரையாக வருகிறது. ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா நேரலை மொத்தம் 50 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடங்களில் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், அன்னதானம் போன்றவையும் வழங்கப்படும்,” என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT