Published : 17 Dec 2024 02:40 AM
Last Updated : 17 Dec 2024 02:40 AM
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் | செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் ||
பையத் துயின்ற பரமனடி பாடி | நெய்யுண்ணோம் பாலுண்ணோம; நாட்காலே நீராடி ||
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம் | செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம்||
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி | உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய் || (திருப்பாவை 2)
மாதங்களில் தான் மார்கழி என்று கூறுகிறான் அந்தக் கண்ணன். இந்த பூவுலகில் வாழும் அனைவரும் பாவை நோன்புக்கு தயாராக இருக்க வேண்டும், இந்த நோன்புக்கு செய்ய வேண்டிய வற்றை அறிந்து கொள்வீர். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணனின் பாதங் களைப் போற்றிப் பாடுவோம். நெய், பால் கலந்த உணவை தவிர்ப்போம். அதிகாலையில் உறக்கம் தவிர்த்து, எழுந்து நீராடுவோம். எவ்வித அலங்காரமும் வேண்டாம். நம்மை நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்ல மாட்டோம். நாம் உய்வை அடைய இதுவே வழியென நினைத்து பாவை நோன்பை நோற்போம் என்று ஆண்டாள் தனது தோழிகளை அழைக்கிறாள்.
நடன சபேசனை போற்றுவோம்!
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் | பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே ||
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் | சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ||
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் | கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் ||
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் | ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய் || (திருவெம்பாவை 2)
சிறந்த அணிமணிகளை அணிந்திருக்கும் தோழியே! நாம் பேசும்போதெல்லாம், என் அன்பு, ஒளிப்பிழம்பாக விளங்கும் இறைவனுக்கு' என்று கூறுவாய். இப்போது உன் அன்பு முழுவதும், ஆழ்ந்த உறக்கத்தின் மீதே இருக்கிறதே! என்று தோழிகள் கூறியதும் உறங்கிக் கொண்டிருந்த தோழி எழுந்து, 'ஏதோ கண்ணயிர்ந்துவிட்டேன் என்பதற்காக இப்படியா பேசுவது?" என்கிறாள். இறைவனைக் காண்பதற்கு, தேவர்கள், முனிவர்கள் பல கால தவம் இருக்கின்றனர். ஆனால் நமக்கோ நம் இல்லத்தின் முன்பாகவே இறைவன் பவனி வர உள்ளான். தில்லை அம்பலத்தில் நடனம் புரிபவன் நம்மை தேடி வரும்போது, நாம் அவன் மீது எவ்வளவு அன்பு வைக்க வேண்டும் என்று தோழிகள் பதிலுரைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT