Published : 15 Dec 2024 08:13 AM
Last Updated : 15 Dec 2024 08:13 AM
சென்னை: பக்தர்கள் தங்களது தரிசன அனுபவத்தை தெரிவிக்க, வடபழனி முருகன் கோயிலில் மின்னணு ஆலோசனை பெட்டி வசதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, “தமிழகத்தில் 48 முதுநிலை கோயில்களில் பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினை அளிக்கும் வகையில் மின்னணு ஆலோசனை பெட்டிகள் வைக்கப்படும். சென்னை வடபழனி முருகன் கோயிலில் மூலவர் சன்னதி மரக்கதவில் வெள்ளித் தகடு போர்த்தும் திருப்பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், வடபழனி முருகன் கோயிலில் உபயதாரர் நிதியில் ரூ.33.85 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட வெள்ளி கதவுகளை கோயில் நிர்வாகத்திடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஒப்படைத்தார். ரூ.10 லட்சம் செலவில் பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி வசதியையும் தொடங்கி வைத்தார்.
மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினையும், ஆலோசனைகளையும் அளிக்கும் வகையில் முதல்கட்டமாக, வடபழனி, மயிலாப்பூர், திருவொற்றியூர், பழநி, திருத்தணி, ஸ்ரீரங்கம் மற்றும் மருதமலை ஆகிய 7 கோயில்களில் மின்னணு ஆலோசனை பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வடபழனி முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு ஆலோசனை பெட்டி வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கருணாநிதி, துறை செயலாளர் பி.சந்தரமோகன், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர்கள் வான்மதி, முல்லை, கோயில் தக்கார் ஆதிமூலம், துணை ஆணையர்கள் ஹரிஹரன், ஜெயா, உபயதாரர்கள் சுதா ஆதிமூலம், பி.கணேஷ் பிரசாத், ரோஹித் ரமேஷ் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT