Published : 13 Dec 2024 12:37 AM
Last Updated : 13 Dec 2024 12:37 AM
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. நடப்பாண்டு திருவிழா கடந்த 1-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் உற்சவம், 63 நாயன்மார்கள் வீதியுலா, வெள்ளித் தேரோட்டம், பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, மகா தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது. அண்ணாமலையார் கோயில் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்புள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் (உற்சவர்கள்) ஆகியோர் மாலை 4 மணியளவில் எழுந்தருள்கின்றனர். மாலை 5.57 மணிக்கு சுவாமி அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கிறார்.
தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்றப்பட்டதும், ‘மலையே மகேசன்’ எனப் போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, கோயிலில் உள்ள நவ கோபுரங்கள் உட்பட திருவண்ணாமலை மாநகரம் முழுவதும் அகல் விளக்கேற்றி பக்தர்கள் வழிபடுவர். விரதம் இருக்கும் பக்தர்கள் தேனும்-தினைமாவும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
11 நாட்களுக்கு தீப தரிசனம்: மோட்ச தீபம் எனப்படும் மகாதீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். பருவதராஜ குல சமூகத்தினர் தீபத்தை ஏற்றுவர். மகா தீபத்துக்காக 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் காடா துணியில் செய்யப்பட்ட திரி ஆகியவை பயன்படுத்தப்படஉள்ளன.
மகா தீபம் ஏற்றப்படும்போது மூலவர் சந்நிதி அடைக்கப்படும். தொடர்ந்து தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி உலா நடைபெறும். ஐயங்குளத்தில் தெப்ப உற்சவம் 3 நாட்களுக்கு நடைபெறும். தீபத் திருவிழாவை தொடர்ந்து பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்கள் வருவதால் 3 நாட்களுக்கு ஏறத்தாழ 40 லட்சம் பக்தர்கள் கிரிவல யாத்திரை மேற்கொள்வர் எனத் தெரிகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மகா தீபம் ஏற்றப்படும் மலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, மலையேறிச் சென்று மகா தீபத்தை தரிசிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT