Published : 05 Dec 2024 01:30 PM
Last Updated : 05 Dec 2024 01:30 PM
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ஏராளமான மழலைகள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றன. கன்னிச்சாமியாக வந்துள்ள பல குழந்தைகளுக்கும் இங்குள்ள வழிபாட்டு முறைகள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதால் மகிழ்வுடன் சந்நிதானத்தில் வலம் வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் பதிவு மூலம் தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் பதிவுதாரர்கள் தினமும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை வருவதில்லை. இதனால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மற்ற பக்தர்களின் தரிசனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதைகள் வழியே ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தரிசனத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாய் அதிகரித்து வருகிறது. பலரும் முதல்முறையாக கன்னிச்சாமியாக வருபவர்கள். இதுவரை வழக்கமான கோயில் வழிபாடுகளை பார்த்த மழலைகளுக்கு இங்குள்ள பூஜை முறைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இருமுடி கட்டுதல், 18-ம் படிகளில் ஏறுதல், நெய்அபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தரிசனம், ஆழித்தீயில் வீசப்படும் தேங்காய்கள், ஓங்கி ஒலிக்கும் சரணகோஷம் உள்ளிட்டவை குழந்தைகளை உற்சாகப்படுத்தி வருகின்றன. இதனால் மழலைகள் பலரும் உற்சாகத்துடன் தரிசனத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT