Published : 24 Nov 2024 05:45 AM
Last Updated : 24 Nov 2024 05:45 AM
சென்னை: குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்த்தால், அவர்களது வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 வார காலமாக விஜய யாத்திரையில் இருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 17-ம் தேதி எடநீர் மடத்துக்கு விஜயம் செய்தார்.
மடத்தின் சார்பில் பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த பாரதி சுவாமிகள், அவரை வரவேற்றார். பின்னர் குக்கே சுப்பிரமண்யா கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 20-ம் தேதி உடுப்பி வந்தடைந்தார். ஸ்ரீ கிருஷ்ணா மடத்தின் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்வ சம்பிரதாயப்படி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி, பொரியிட்டு மரியாதை செய்யப்பட்டது.
மேலும் ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் கோடி கீதலேகனா யக்ஞத்தை, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார். கடந்த 21-ம் தேதி சிக்மகளூர் மாவட்டம் கோப்பா தாலுகாவில் உள்ள ஸ்ரீ ஜகத்குரு பதரிசங்கராச்சார்யா சமஸ்தானம் - சகடபுரம் ஸ்ரீவித்யாபீடத்துக்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார். அங்கு சுவாமிகளை பல்லக்கில் எழுந்தருளச் செய்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜகத்குரு ஸ்ரீ வித்யாபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை வரவேற்று, இரண்டு மடங்களுக்கும் உள்ள நீண்ட கால தொடர்பை நினைவு கூர்ந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தன்னுடைய அனுக்கிரஹபாஷனத்தில், “சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை பயிற்றுவிக்க வேண்டும்.
நான் காஞ்சி சங்கர மடத்துக்கு முதன்முதலில் வந்தபோது, மகாஸ்வாமி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்னை அரவணைத்து, பலவித ஆலோசனைகளை வழங்கி, அனைத்து கலைகளையும் கற்பித்தார். நல்ல தெய்வீக சூழலை உருவாக்கிக் கொடுத்தார்.
பிரகாசமான எதிர்காலம்: இப்படி ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் ஆன்மிக, தெய்வீக சூழலை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம், கலாச்சாரம், வேதம், சனாதன தர்மம் தொடர்பான தகவல்களைத் தெரிவித்து, நல்லகல்வி அளிக்க வேண்டும். அப்போது அவர்களது எதிர்கால வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்” என்று அருளினார். நிகழ்ச்சியில், சகடபுரம் சமஸ்தானத்தின் நிர்வாகிகள், காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகள், வேத பாடசாலை குழந்தைகள் என பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT