Published : 04 Nov 2024 11:45 AM
Last Updated : 04 Nov 2024 11:45 AM
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடி மரத்தை புதுப்பிக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோயில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. நடராஜர் கோயிலில் நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிந்தராஜ பெருமாள் சன்னதி பகுதியில் கொடிமரம் அமைந்துள்ளது. இந்த கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில் மழையால் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.அதை மாற்றி அமைப்பதற்கு கோவிந்தராஜ பெருமாள் சன்னதி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய கொடி மரத்திற்கு பாலாலயம் ( படையல்) செய்து மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்றிரவு (நவ.3) சுமார் 8 மணி அளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு (பாலாலயம்) படையல் செய்தனர்.
அப்போது அங்கிருந்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு கோயில் கொடி மரத்தை மாற்றக்கூடாது. பிரமோற்சவம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, அதனால் எந்த பணியும் செய்யக்கூடாது என்று கூறி கொடி மரத்தை சுற்றி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து பட்டாச்சாரியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை (நவ.4) கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், துணை ஆணையர் சந்திரன் மற்றும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தை மாற்றுவதற்காக வந்தனர். பட்டாச்சாரியார்களும் அவர்களுடன் சென்றனர். இதற்கு நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் அவர்களை சூழ்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தீட்சிதர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தொடர்ந்து தீட்சிதர்கள் கொடி மரத்தை மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனை அடுத்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் இருதரப்பினரின் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் சிதம்பரம் நடராஜர் கோயில் வாலா பகுதி முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT