Published : 12 Oct 2024 07:38 PM
Last Updated : 12 Oct 2024 07:38 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பரிவேட்டை ஊர்வலத்துக்கு யானை வழங்குவதாக உறுதியளித்து விட்டு ஏமாற்றியதால் அதிருப்தியடைந்த பக்தர்கள் பொம்மை யானையுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். பெண்கள் யானை வழங்காத அரசை கண்டிப்பதாக பதாகைகள் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த விழாவில் விஜயதசமியன்றி நடைபெறும் இறுதி நாள் திருவிழாவில் பகவதியம்மன் மகாதானபுரத்திற்கு வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்வில் யானை முன்செல்ல ஊர்வலமாக ஏராளமான பக்தர்கள் செல்வதும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் மன்னர் காலத்தில் இருந்தே பாரம்பரியமாக நடந்து வந்த நிகழ்வு.
இந்நிலையில், கோயில் நிகழ்ச்சிகளில் குமரி மாவட்டத்தில் யானைகளை பயன்படுத்துவது வனத்துறை கட்டுப்பாட்டுடன் கடந்த ஓராண்டாக தவிர்க்கப்பட்டு வருகிறது. இதனால் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் கடந்த வைகாசி விசாக திருவிழாவின்போதும் புனிதநீர் எடுக்கும் நிகழ்வில் யானை வழங்கப்படவில்லை. அதே நேரம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி விழாவிற்காக சுவாமி விக்ரகங்கள் கொண்டு சென்றபோது, தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி விக்ரகம் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இச்சூழலில் கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்வில் ஊர்வலத்தில் யானைக்கு அனுமதியில்லை என தகவல் பரவியது. இதனால் கன்னியாகுமரியில் நவராத்திரி விழா துவங்கிய நாளில் இருந்தே பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பரிவேட்டைக்கு இரு நாட்களுக்கு முன்பு இரவில் கோயில் முன்பு அமர்ந்து பக்தர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் கன்னியாகுமரியில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முயன்றபோது தகவல் அறிந்து வந்த வனத்துறை குழுவினர் பகவதியம்மன் கோயில் வளாகத்தில் யானை கட்டும் பகுதி, யானைக்கான உணவு தயார் செய்யும் இடத்தை ஆய்வு செய்து பரிவேட்டை ஊர்வலத்தில் யானை வழங்குவதாக உறுதியளித்து விட்டு சென்றனர். இதனால் பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இன்று பரிவேட்டை நடைபெற இருந்த நிலையில் முந்தையதினம் இரவு வரை யானை வரவில்லை. மேலும் யானை ஊர்வலத்திற்கு வழங்கமாட்டார்கள் என அறிந்த பக்தர்கள் நேற்று இரவோடு இரவாக பொம்மை யானையுடன் ரதவீதி, சன்னதி தெரு போன்ற இடங்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பகவதியம்மன் கோயில் முன்பு நின்று பொம்மை யானையுடன் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.
மேலும் இன்று பரிவேட்டை ஊர்வலம் துவங்கியதும் விவேகானந்தபுரம் சாலையில் பொம்மை யானையை பக்தர்கள் வைத்து சென்றனர். அதில் `இது திராவிட மாடல் யானை` என குறிப்பிட்டிருந்தனர். மேலும் சாலையோரம் நின்ற பெண்கள், யானை வராததை சுட்டிக்காட்டி அரசுக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்த போலீஸார் சாலையின் நடுவே நிறுத்தியிருந்த பொம்மை யானையை அகற்றினர். அதை கன்னியாகுமரி பேரூராட்சி குப்பை வண்டியில் வைத்து எடுத்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT