Published : 28 Aug 2014 12:00 AM
Last Updated : 28 Aug 2014 12:00 AM
போட்டிகள், பொறாமைகள் நிறைந்த உலகில் இது மிக ஆபூர்வமான கேள்வி. நம்மால் பழிவாங்கப்படுவதற்கும் அல்லது நம்மைப் பழி தீர்ப்பதற்கும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் இருப்பவர்களே எதிரிகள். அவர்களை நேசிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதான் பலரது தீர்மானம்.
உங்கள் எதிரிகள் மீதான வன்மத்தை ஒரு வாளின் முனைபோல மனதில் கூர் தீட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் “ வாளை எடுத்தவன் வாளால் மடிவான்” என்று இயேசு கற்பித்தார். வன்மமும் வன்முறையும் மனதில் வசிக்குமானால் அவை நம் அகத்தின் கண்ணாடியாக விளங்கும் முகத்தில் தெரியும். உங்களது ஒரு சிறு கள்ளப் புன்னகையைக்கூட உங்கள் எதிரியால் புரிந்துகொள்ள முடியும்.
மாறாக, உங்கள் எதிரியை நீங்கள் மன்னித்து விட்டீர்கள் என்றால், பழி தீர்க்கும் எண்ணத்தோடு உங்களைச் சந்திக்கும் எதிரி, உங்கள் முகம் பார்த்து வெட்கித் தலைகுனிவான். ஏனெனில் உங்கள் முகத்தில் ஒளிரும் அன்பு அவன் கண்களைக் கூசச் செய்யும் வல்லமை வாய்ந்தது. அதனால்தான் எதிரிகளிடம் அன்புகாட்டும்படி வலியுறுத்துகிறார் இயேசு. அது தொடர்ச்சியான அன்பாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறார்.
“உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக நீங்கள் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்” என்று இயேசு குறிப்பிட்டார் (மத்தேயு 5:44). கடவுளின் மற்றொரு ஊழியரான ரோமர், “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாகிலும் சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாகிலும் குடிக்கக் கொடுங்கள்; தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” (ரோமர் 12:20) என்று குறிப்பிடுகிறார். ஆனால், மதம், இனம், நிறம் என பிளவுபட்டுக் கிடப்பதையே தன் முக்கிய இயல்பாகக் கட்டிக்காத்துவரும் இவ்வுலகில் இத்தகைய அபூர்வமான அன்பை மனிதர்களால் கட்ட முடியுமா?
வாழ்வைச் சாட்சியாக்கிய இயேசு
மற்றவர்களுக்குச் சொல்வது எளிது. ஆனால் அதன்படி வாழ்ந்து காட்டுதல் அத்தனை எளிதல்ல. ஆனால் இயேசு கற்பித்ததோடு மட்டுமல்ல, கற்பித்தவற்றைக் கடைப்பிடித்துத் தனது வாழ்வையே போதனைகளுக்கு சாட்சியாக்கினார்.
அவருடன் உண்டு, உறங்கி, ஜெபித்த, அவரது அன்புக்குரிய சீடன் யூதாஸ், இயேசுவை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்கத் தயாரானபோது, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லி வைத்திருந்தான். அதனால் அவன் நேராக இயேசு தன் சீடர்களோடு ஜெபித்துக் கொண்டிருந்த இடத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போனான். அரசப் படை வீரர்களுக்கு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக அவர் அருகில்போய் ,
“ ராபி வாழ்க!” எனச் சொல்லி, மிக மென்மையாக அவரை முத்தமிட்டான். இயேசுவோ அவனைப் பார்த்து, “நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன் பதில் எதுவும் கூறவில்லை.
எதிரிகள் ஆயுதங்களுடன் வந்து தன்னை அநியாயமாகக் கைதுசெய்த அந்த இரவிலும்கூட இயேசு அவர்கள்மீது மாற்றமில்லாத அன்பைக் காட்டினார். இயேசுவைக் கைதுசெய்ய அவரது கைகளைப் பற்ற நெருங்கினான், அங்கு வந்திருந்த யூதேயா. அவன் அரசப் படை வீரர்களில் ஒருவன். அப்போது இயேசுவின் சீடரான பேதுரு தன் வாளை உருவி, அவனது காதை வெட்டித் துண்டிக்க, கீழே விழுந்த காதை எடுத்துக் காதின் இடத்தில் பொருத்தி அக்கணமே குணப்படுத்தினார் இயேசு.
பேதுரு அப்போதுகூட அந்த வீரரை விடத் தயாராக இல்லை. அந்தச் சமயத்தில், “பேதுரு, உன் வாளை உறையில் போடு! வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்ற ஒரு முக்கிய நியமத்தை அவர் குறிப்பிட்டார்; அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அந்த நியமம் இன்றுவரை ஒரு வழிகாட்டியாக இருந்துவருகிறது (மத்தேயு 26:48).
இயேசுவைப் பின்பற்றாத சகோதர மதத்தினர்களும்கூட வன்முறை என்பது இரு புறமும் கூர் கொண்ட கத்தி என்ற கருத்தை ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள். இயேசுவின் இந்த வார்த்தைகள் இன்று எல்லாக் கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அன்பினால் வெல்ல முடியாதவர்கள் வாளால் வெல்ல முடியாது என்பதற்கு இயேசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல; அவரது வாழ்க்கையும் சாட்சியாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT