Published : 10 May 2018 10:24 AM
Last Updated : 10 May 2018 10:24 AM
நம்முடைய கண்ணுக்குத் தெரிவதும் காதுக்குக் கேட்பதுமே உண்மை; இதைத் தவிர வேறு எதுவும் உண்மை கிடையாது; வேத புராணங்களில் சொல்லியிருப்பதெல்லாம் பொய் என்று நினைப்பது மிகவும் தப்பு. இப்போது நம் கண்ணுக்குத் தெரிகிற வஸ்துக்களின் அளவை நம் கண்ணிலுள்ள லென்ஸால் நிர்ணயித்துக்கொள்கிறோம். இந்த லென்ஸ் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தால் நாம் பார்ப்பனவற்றின் அளவும் அதைப் பொறுத்து மாறித்தான் தெரியும். நம்முடைய லென்ஸுக்குள் பிடிபடாத ஒளி அலைகளும் (waves) இருக்கக்கூடும்.
நம்முடைய காதில் உள்ள டமாரத்துக்குப் (drum) பிடிபடாத ஒலிகளும் இருக்கக்கூடும். நமக்குத் தெரிவதையும் கேட்பதையும் தவிர பிரபஞ்சத்தில் எதுவுமே இருப்பதற்கில்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? தெய்விக சக்திகளைப் பெற்ற மகாபுருஷர்கள் ஞானக்கண் கொண்டு, நமக்குத் தெரியாத திவ்விய காட்சிகளைப் பார்த்து அந்த தெய்வ மூர்த்திகளை வர்ணிக்கிறார்கள். நமக்குக் கேளாத திவ்விய சப்தங்களைக் கேட்டு மந்திரங்களாக்கித் தந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் முழுவதையும் பரமேசுவரனின் நாட்டியமாகவே பார்க்கிறார்கள். அதுதான் நடராஜனின் நடனம். ஆடிக்கொண்டிருக்கிற நடராஜனிடமிருந்துதான் சகல சப்தங்களும் பிறக்கின்றன. நடராஜர் வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார். ஆடி நிறுத்துகிற சமயத்துக்கு முந்தி ஜடை விழுதுகள் பாக்கவாட்டில் இருபுறமும் நீட்டி நிற்கின்றன. சலனத்தில் உள்ள வஸ்துவை இந்தக் காலத்தில் ‘ஸ்நாப் ஷாட்’ என்று போட்டோ பிடிக்கிறார்கள் அல்லவா? அதுபோல் இந்த ஜடை இருபுறமும் நீட்டிக்கொண்டிருக்கும் அவசரத்தைத் தெய்வச் சிற்பி அப்படியே நடராஜ விக்கிரகமாகப் பண்ணி விட்டார். இது நம் கண்ணுக்குத் தெரிகிற நடராஜ மூர்த்தியின் ஸ்வரூபம்.
பதினான்கு சப்தத் தொகைகள்
நம் காதுக்குப் புலனாகிற சப்தப் பிரபஞ்சமும் அவரிடமிருந்தே தோன்றியது. நடராஜா கையில் உடுக்கை இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டியின் உடுக்கையைவிடப் பெரியது. மாரியம்மன் கோயில் பூசாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. இந்த உடுக்கைக்கு ‘டக்கா’ மற்றும் ‘டமருகம்’ என்றும் பெயர். நாட்டியம் முழுவதிலுமே பலவிதமாக ஆடி முடிக்கிற சமயத்தில் ஜடை விரித்து நின்றதுபோல், இந்த உடுக்கானது நாட்டியம் முழுவதும் பாத தாளத்தை அனுசரித்துச் சப்தித்துவிட்டு, ஆடலை நிறுத்திய வேகத்தில் படபடவென ஒரு சாப்புத் தொனியை ஒலித்தது. ஸ்வரூபத்தை விஸ்வகர்மா விக்கிரகமாக வடித்ததுபோல் இந்தச் சாப்புத் தொனியை அப்படியே கிரகித்து நந்திகேசுவரர் ‘மகேசுவர சூத்திரம்’ என்று பெயரிட்டார். அந்தச் சாப்புத் தொனியில் பதினாலு சப்தத் தொகைகள் இருந்தன. அவை ‘அ இ உண்’ என்று தொடங்கி ‘ஹல்’ என்று முடியும்.
இந்த ஒலிகளையே வியாகரணத்துக்கு—அதாவது மொழி இலக்கணத்துக்கு மூலமாக வைத்துப் பாணினி மகரிஷி ‘அஷ்டாத்தியாயி’ என்ற நூலை எழுதினார்.
வேதங்கள் நான்கு; அதன் அங்கங்கள் ஆறு; மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்று நாலு — மொத்தம் இந்தப் பதினான்குமே இந்து மதத்தின் ஆதார நூல்கள். இவற்றை சதுர்த்தச (பதினான்கு) வித்யா ஸ்தானம் என்பர். இதற்கு ஏற்றாற்போல் சர்வ வித்தைகளுக்கு ஈசுவரனான நடராஜாவின் டமருகத்திலிருந்தும் பதினாலு சப்தக்கோவைகளே வந்தன. இவை ‘அ’ வில் ஆரம்பித்து ‘ல்’—லோடு முடிவதாகச் சொன்னேன். இதனால் ‘அல்’ என்றாலே இலக்கணச் சாஸ்திரப்படி எல்லா எழுத்துக்களையும் குறிக்கும்.
இதில் குறிப்பிட வேண்டிய அம்சம், இந்த ‘அல்’ எல்லா பாஷைகளிலும் இருக்கிறது. உருதுவில் ‘அலீஃப்’ என்பது முதல் எழுத்து. கிரீக்கில் ‘ஆல்ஃபா’ என்பது முதல் எழுத்து. ‘ஆல்ஃபபெட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் இந்த ‘அல்’லை வைத்துத்தான். இப்படியாக சகல பாஷைகளும் சகல சப்தங்களும் ஈசுவரனிடமிருந்தே பிறந்திருக்கின்றன.
பதஞ்சலியின் விளக்கம்
இதைப் பற்றி யக்ஞ நாராயண தீக்ஷிதர் சமத்காரமாக ஒரு சுலோகம் செய்திருக்கிறார். ‘பாணி’ என்றால் கை, ‘நாதம்’ என்றால் ஒலி. ‘பாணி நிநாதம்’ என்றால் (நடராஜர்) கையால் செய்த ஒலி என்று அர்த்தம். அதுவே ‘பாணினி’ மகரிஷி செய்த (நாத பாஷை) சாஸ்திரமாயிற்று. வியாகரணத்துக்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இவர் ஆதி சேஷ அவதாரம். ஆதிசேஷன் நடராஜரின் காலைப் பாதசரமாகச் சுற்றியிருக்கிறார்.
நடராஜாவின் கையிலுள்ள உடுக்கிலிருந்து சப்தம் வந்தது. அவரது காலில் உள்ள பதஞ்சலி அதற்கு விளக்கம் தந்திருக்கிறார். அதனால், நடராஜா கையையும் காலையும் ஆட்டினாலே ஸகல பாஷா சாஸ்திரமும் உண்டாகிவிடுகிறதென்று கவி சொல்கிறார்.
இதன் உட்பொருள் சப்தம், அதன் அர்த்தம் இரண்டுக்கும் ஈசுவரனே மூலம் என்பதேயாகும். இதை உணர்ந்துவிட்டால் நாம் வாக்கை வீணாக்க மாட்டோம். நாம் எழுதுவது, பேசுவது எல்லாம் நம்மையும் பிறரையும், ஈசுவர பரமாக நினைக்கச் செய்து உயர்த்தவே பயனாகும்.
(தெய்வத்தின் குரல் முதல் பாகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT