Published : 04 May 2024 08:59 PM
Last Updated : 04 May 2024 08:59 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மே 6-ம் தேதி நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் ரெங்கநாதருக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருள்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புமிக்கதாகும். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து ரெங்கமன்னாரை(ஶ்ரீரங்கம் ரெங்கநாதர்) மணந்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் ஸ்ரீரங்கம் ரெங்கமன்னார் உடுத்திய பட்டு வஸ்திரம் அணிந்து ஆண்டாள் காட்சியளிப்பார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் ஆண்டாள் சூடிக் கொடுத்த பட்டுவஸ்திரம் அணிந்து ரங்கநாதர் தேரில் எழுந்தருள்வது வழக்கம்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மே 6-ம் தேதி சித்திரை தேரோட்ட திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் மாட வீதிகள் வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மே 6-ம் தேதி காலை நடைபெறும் ஸ்ரீரங்கம் தேரோட்ட திருவிழாவில் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ரெங்கநாதருக்கு அணிவிக்கப்பட உள்ளது. இதில் ராம்கோ குழும இயக்குநர் என்.கே.ஸ்ரீகண்டன் ராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT