Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM
நம்மில் பலரும் “ நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னோட எஜமான் அவர் மட்டும்தான்.” என்று வானை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டுகிறோம். ஆனால் நம் அன்றாட நடத்தையை அல்லது இன்றைய ஒருநாளில் உங்கள் ஒட்டுமொத்த நடத்தையை பரிசீலித்துப் பாருங்கள். காலை நீங்கள் எழுந்தது முதல், இரவு நீங்கள் படுக்கைக்குச் செல்லும் வரை கடவுளுக்கு விரோதமாக அறிந்தோ அறியாமலோ அநேக காரியங்களை நீங்கள் செய்திருக்கக் கூடும்.
நேற்றிரவில் உங்கள் கடமைகளை முடித்து முன்னதாக நித்திரை கொள்ளச் சென்றீர்களா? பல நேரங்களில் நீங்கள் படுக்கைக்கு முன்னதாகச் செல்ல முடியாமல் போவதால் மறுநாள் காலை, பள்ளிக்குச் செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு முன்பாக உங்களால் எழ முடிவதில்லை. இதன்மூலம் ' உங்கள் சந்ததியினருக்கு நீங்கள் முன்னுதாரணராய் இருங்கள். உங்கள் பரலோகத் தகப்பன் அதையே உங்களிடம் எதிர்பார்க்கிறார்' என்று கொலேசியரின் திருமக வசனம் உறுதியாகச் சொல்கிறது.
எப்படித் தொடங்குகிறது உங்கள் நாள்?
வீட்டின் தலைவராகிய நீங்கள் காலையில் எல்லோருக்கும் முன்னர் விழித்தெழத் தவறுவதால், உங்கள் பிள்ளைகளும் படுக்கையில் புரண்டபடி, சோம்பலோடு மல்லுக்கட்டுவதைக் காண்கிறீர்கள். அப்பா வேலை முடித்து எப்போது வருவார், அவரோடு சிறிது விளையாடி உறங்கச் செல்லலாம் என்ற அவர்களது உள்ளக்கிடக்கையின் காரணமாகவே பெரும்பாலான பிள்ளைகள் உறங்கச் செல்வதில்லை. இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
குடும்பத்தின் பல காரியங்களின் மூலமே நீங்களா யிருக்கும்போது மறுநாள் காலை பள்ளிக்குச் செல்ல, மெல்ல ஆயத்தமாகும் பிள்ளைகளின் மீது அன்றைய நாளின் உங்கள் கோபம் முதல் முறையாகப் பிரயோகிக்கப்படுகிறது. ‘பிள்ளைகளை என்னிடத்தில் வரவிடுங்கள்.
ஏனெனில் பரலோக ராஜ்ஜியம் அவர்களைப் போன்றதே'(மத்தேயு) என்று இயேசு சுவாமி சொன்னதை நினைவில் வைத்திருங்கள். குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் கோபம் அவர்களை அன்றைய தினத்தின் உள்ளக் கிடக்கையை நசுக்கிப் போடுகிறது என்பதை தலைவனாகிய நீங்கள் உணரத் தலைப்படுங்கள். இல்லத்தின் ஸ்த்ரீகளுக்கும் இது பொருந்தும்.
வழிநெடுக வசைபாடல்
பிறகு வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்லும் வழியில் உங்களை இடித்துவிட்டுச் செல்லும் சக மனிதரை வசைபாடுகிறீர்கள். சில வேளை போக்குவரத்து சமிக்கை விளக்குகளை மீறி வாகனத்தில் பறக்கிறீர்கள். உங்களைத் தடுத்து நிறுத்தும் போக்குவரத்து போலீசாரிடம் விவாதம் செய்கிறீர்கள். “நான் யார் தெரியுமா? ” என்று அவரிடம் உங்கள் அகந்தையைக் கொட்டுகிறீர்கள். அவர் வழக்கு என்றதும் அவருக்கு நீங்கள் கையூட்டு அளித்துத் தப்பித்துச் செல்கிறீர்கள்.
உங்களின் மீறலைக் கண்காணித்து எச்சரிக்கும் பொருட்டு, அந்தப் போக்குவரத்து போலீஸ்காரராக உங்கள் பரலோகத் தகப்பன் அந்த இடத்தில் செயலாற்றுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ‘அடுத்துவரும் ஆபத்துக்களிலிருந்து உங்களை எச்சரித்துக் காக்கவே அவர் எல்லா ரூபங்களிலும், உங்களைக் கண்காணிக்கவும், ஆற்றுப்படுத்தவும் செய்கிறார்' என்கிறது லேவியராகமம்.
ஆனால் சில நிமிடங்கள் போலீஸ்காரராக உங்களைக் கண்டித்த தந்தையிடம் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதைப் பெற்றுக்கொள்ளாமல் அவருக்குக் கையூட்டு அளித்துச் செல்கிறீர்கள். நீங்கள் கையூட்டு அளிக்கும் சமயத்தில் உங்கள் பிள்ளைகள் இருந்தால் அந்தப் பெருநோயை அவர்களுக்கும் பரப்பும் தகப்பனாக இருக்கிறீர்கள்.
பணியிடத்தில் நீங்கள் யார்?
உங்கள் பணியிடத்தில் நீங்கள் எப்படிப்பட்டவராய் இருக்கிறீர்கள்? நீங்கள் திறன்பட உங்கள் பணிகளைச் செய்கிறவர் எனில், உங்கள் மேலதிகாரியே உங்கள் மீது மரியாதை கொள்வது மட்டுமல்ல, உங்களைக் குறித்து அவர் எச்சரிக்கையாகவும் இருப்பார். மேலும் ‘தொழிற்கடமைகளிலிருந்து நழுவாதீர்கள். கடமையின் மைந்தனாய் இருங்கள். அப்போது நீங்கள் பணியிடத்தில் எல்லோருக்கும் உகந்தவராய் இருப்பீரே அன்றி, பலிபீடத்திலிருந்து துள்ளித் தப்பித்த எருமைக் கன்றைப்போல் தனித்து விடப்பட மாட்டீர்' என்கிறது ஆதியாகமம்.
உண்மையும் அதுதான். இன்றைய கார்ப்பரேட் உலகில் உங்கள் பணியை திறம்படச் செய்வதே நீங்கள் பணியாளர் என்பதற்கான அத்தாட்சியே அன்றி, அங்குள்ள குழு அரசியலில் சிக்கிக்கொள்வதல்ல. அதை உங்கள் தந்தை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆக உங்களை ஒவ்வொரு நிலையிலும் சரியான வழியில் நடத்திச் செல்லும் ‘கடவுள் ஓர் அன்பான தகப்பனைப் போன்றவர்’(பேதுரு 5:6).
கடவுள் சொல்வதை கேளுங்கள்
பூமியின் மனித வாழ்வில் ‘என்னிடம் வாருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்; அப்பொழுது என்றென்றும் வாழ்வீர்கள் என்று கடவுள் நம்மிடம் சொல்கிறார்’ (ஏசாயா 55:3). காரணம், ‘வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தந்தை படைத்தார்’(சங்கீதம் 83:17)ஆதாம்-ஏவாளுக்கு அநேக நல்ல காரியங்களை தந்தை கொடுத்தார் (ஆதியாகமம் 1:28).
‘ஒரேவொரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னார் (ஆதியாகமம் 2:16,). ஆனால் ‘ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் இறந்துபோனார்கள் (ஆதியாகமம் 3:6, 23). ‘இறந்தவர்கள் மண்ணோடு மண்ணாகிவிடுவதால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது'(ஆதியாகமம் 3:19).
ஆனால் அடுத்த சந்ததியினர் தங்கள் பெற்றோரின் பாவம் தங்களைத் தொற்றிக்கொள்ளாதிருக்க, கடவுள் சொல்வதைக் கேட்டிருந்தால் அவர் பெருவெள்ளத்தால் இந்த உலகை முதல்முறையாக அழித்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
கடவுள் கைவிடாதவர்
பெருவெள்ளத்துக்கு முன் ‘நோவா காலத்தில் வாழ்ந்த அநேகர் மோசமான காரியங்களையே செய்தார்கள்' (ஆதியாகமம் 6:5). ‘கடவுள் சொன்னதைக் கேட்டு நோவா ஒரு பேழையைக் கட்டினார் (ஆதியாகமம் 6:13). வெள்ளைத்தைக் கொண்டு ‘கெட்டவர்களைக் கடவுள் அழித்தார், ஆனால் நோவாவின் குடும்பத்தாரைக் காப்பாற்றினார் (ஆதியாகமம் 7:11).
ஏன் நோவா குடும்பத்தை மட்டும் காத்தார்? அவரும் அவரது குடும்பத்தாரும் கடவுள் சொன்னபடியே வாழ்ந்து வந்தார்கள். பெருவெள்ளத்துக்குப் பிறகு பூமியில் பல்கிப் பெருகிய மனித இனத்தில் கெட்டவர்களும் இன்று பெருகிவிட்டார்களே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ‘கடவுள் மீண்டும் கெட்டவர்களை அழிப்பார், நல்லவர்களைக் காப்பாற்றுவார்'( மத்தேயு 24:37).
‘எல்லா கஷ்டத்திற்கும் கடவுளுடைய அரசாங்கம் முடிவு கட்டும்'(வெளிப்படுத்துதல் 21:3) அதுவரை நீங்கள் ‘கடவுள் பக்கம் நில்லுங்கள்.'( பேதுரு 5:6) ‘அன்புதான் குடும்ப மகிழ்ச்சிக்கு அடிப்படை'(எபேசியர் 5:33). அதை உங்கள் குடும்பத்துக்கு முழுமையாக அளிக்கத் தவறாதீர்கள். ‘கனிவுடனும் கற்புடனும் நடந்துகொள்ளுங்கள்; கொடுமையோ துரோகமோ செய்யாதீர்கள்'
(கொலோசெயர் 3:5).
‘தீமையை வெறுத்து விடுங்கள்'(கொரிந்தியர் 6:9). 'நன்மை செய்யுங்கள்'
(மத்தேயு 7:12). சரியான தீர்மானங்கள் எடுங்கள், ‘கடவுள் சொல்வதைக் கேளுங்கள். மத்தேயு'( 7:24). உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பாக்கியவானாக இருப்பீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT