Published : 28 Mar 2024 05:30 AM
Last Updated : 28 Mar 2024 05:30 AM

ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

`வடசபரி' என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். |படங்கள்: எஸ்.சத்தியசீலன்|

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

`வடசபரி' எனப் போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பரிவார தெய்வங்களுடன், பதினெட்டு படி மீது சுவாமி ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் கன்னிமூல கணபதி, நாகராஜர், சின்ன கருப்பர், பெரிய கருப்பர் சந்நிதிகளும் உள்ளன. தற்போது ரூ.4.50 கோடி செலவில் புதிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விநாயகர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, இக்கோயிலின் 4-வது கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 24-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தன பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கலாகர்ஷனம், கடஸ்தாபனம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜையும் தொடங்கியது.

25-ம் தேதி விசேஷசந்தி, திரவியாஹுதி நடைபெற்றன. தொடர்ந்து 26-ம் தேதி வரை 5 கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. 24-ம் தேதி முதல் வேதபாராயணம், தேவார இன்னிசை, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

இந்நிலையில், கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7.15 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷாபந்தனம், 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றன. 9.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, 10 மணிக்கு கடம் புறப்பாடு தொடங்கியது. காலை 10.45 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சா ரியார்கள், கோபுர கலசங்கள் மீது
புனித நீரை ஊற்றுகின்றனர் .

சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மோகனரு, பிள்ளையார்பட்டி சிவ பிச்சை குருக்கள் ஆகியோர் தலைமையேற்று, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். வேத மந்திரங்கள் முழங்க, ஐயப்பன் கோயிலின் மூலஸ்தான விமான கலசம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

திரளாக கூடியிருந்த பக்தர்கள், ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில், கும்பாபிஷேக திருப்பணி குழு தலைவர் ஏ.சி.முத்தையா மற்றும் குமாரராணி மீனா முத்தையா, ஏ.ஆர்.ராமசாமி உள்ளிட்ட அறங்காவலர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x