Published : 10 Feb 2024 06:08 AM
Last Updated : 10 Feb 2024 06:08 AM

தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்

தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய பக்தர்கள். படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்/திருச்சி/ஈரோடு: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் மற்றும் பவானி கூடுதுறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ராமேசுவரத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே குவியத் தொடங்கினர்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு ராமநாத சுவாமி கோயில் நடைதிறக்கப்பட்டு, ஸ்படிக லிங்கபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கால பூஜை, அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோருக்கு திதி கொடுத்து, கோயிலில் உள்ள22 தீர்த்தங்களில் நீராடி, ராமநாத சுவாமி- பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதை, லட்சுமணர் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரிக் கரையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான மக்கள் நீராடி, அங்குள்ள புரோகிதர்கள் உதவியுடன் தர்ப்பணம் செய்தனர். பலர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதனால் மாம்பழச்சாலை முதல் ஸ்ரீரங்கம் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காவல்உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருச்சி  ரங்கம் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் காவிரிக் கரையில்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்.

காவிரி ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்த மக்கள், அருகில் உள்ள ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று வழிபட்டதால், வழக்கத்தைவிட கோயில்களில் கூட்டம் அதிகம் இருந்தது.

பவானி கூடுதுறையில்... ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று காலை முதலே ஏராளமானோர் காவிரி, பவானி மற்றும்அமிர்தநதி சங்கமிக்கும் கூடுதுறையில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்ததால் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் புனித
நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதேபோல, கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் காவிரிக் கரையிலும், கருங்கல்பாளையம் காவிரிக் கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x