Published : 03 Feb 2024 06:20 AM
Last Updated : 03 Feb 2024 06:20 AM

`சிவாய நம, ஓம் நமசிவாய' கோஷம் முழங்க அவிநாசி கோயில் குடமுழுக்கு விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அவிநாசியில் நேற்று விமரிசையாக நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா. | படங்கள்: இரா.கார்த்திகேயன் |

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. அவிநாசியில் உள்ள கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, கடந்த ஜன. 24-ம்தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. ஜன. 29-ம் தேதி முதல் கால யாகபூஜை தொடங்கி பிப். 1-ம் தேதி காலை வரை 5 கால யாகபூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கொடிமரம், கனகசபை, பாலதண்டாயுதபாணி கோயில், துர்கை, சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 42 பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக நேற்று காலை 8-ம் கால யாகபூஜை நடத்தப்பட்டு, கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசியப்பர் கோயில், வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடந்தது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஏ.சக்திவேல் உள்ளிட்டோர் பச்சைக் கொடி அசைத்து குடமுழுக்கை தொடங்கிவைத்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களில் ஒரு பகுதியினர்.

அப்போதுபோது ‘கருணையாத்தா அவிநாசியப்பா,’ `சிவாயநம,’ `ஓம் நமசிவாய’, `வேலவா அரோஹரா’ என்ற பக்தி முழக்கங்களால் அவிநாசியே அதிர்ந்தது. சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அப்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களின் மீது பூக்கள் தூவப்பட்டன. மேலும், பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் மீது ட்ரோன்மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் வளாகம், மங்கலம் சாலை, சேவூர்சாலை பிரிவு, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகள், கோவை நெடுஞ்சாலை, ஈரோடு,திருப்பூர் சாலைகள், வீரஆஞ்சநேயர் கோயில், கரிவரதராஜபெருமாள் கோயில் என அனைத்துப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கூனம்பட்டி ஆதினம் ல ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், அவிநாசி ஸ்ரீகாமாட்சிதாசசுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திருப்பூர் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x