Published : 02 Feb 2024 06:12 AM
Last Updated : 02 Feb 2024 06:12 AM
மாமல்லபுரம்/காஞ்சிபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்களில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக வைபவத்தில் அமைச்சர்கள், ஆட்சியர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கடல் மல்லை எனப் போற்றப்படும் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில், 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாக விளங்கி வருகிறது. கடந்த 1998-ம் ஆண்டு மே மாதம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எனினும், பல்வேறு காலநிலை மாற்றங்களால் கோயிலின் உட்பகுதிகள் சிதிலமடைந்தன. இதனால், திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பட்டாச்சாரியார்கள் மூலம் புனித நீர் கொண்ட கலசங்கள் அமைத்து சிறப்பு வேள்விகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
நேற்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் புனித கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு ஆராதனைகளுடன் மூலவர் விமானங்களின் மீதுள்ள கலசங்களின் மீது பட்டாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். பின்னர், மூலவருக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், எஸ்.பி. சாய்பிரனீத், திருப்போரூர் எம்எல்ஏ.பாலாஜி, காஞ்சிபுரம் அறநிலையத் துறை இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல், சுற்றுலாத் துறை அலுவலர் சக்திவேல், டிஎஸ்பி ஜகதீஸ்வரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆயிரம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் காஞ்சிபுரம். இந்த காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற சிவலாயங்களில் ஒன்று கச்சபேஸ்வரர் கோயில். இந்த கோயில் கடந்த 2005-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 163 சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளம் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊர்வலமாக ராஜகோபுரம் மற்றும் சந்நிதி கோபுரங்களுக்கு கொண்டு சென்று கோபுர கலசங்கள் மீது ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவையொட்டி கடந்த ஜனவரி 28-ம் தேதி காலையே பூஜைகள் தொடங்கின. விகனேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மறுநாள் யாக சாலை நிர்மாணங்கள் நடைபெற்றன.தொடர்ந்து யாக சாலை பூஜைகள் தினமும் நடைபெற்றன.
குடமுழுக்கு விழாவான நேற்று யாக சாலை பூஜைகள் முடிந்து கலச புறப்பாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து விமானம், ராஜகோபுரம், ரிஷி கோபுரத்துக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், திருக்கல்யாண விசேஷ தரிசனமும் நடைபெற்றன.
இந்த குடமுழுக்கு விழாவையொட்டி பக்தி நடனம், பக்தி பாடல்கள், பரத நாட்டியம் உட்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT