Published : 17 Jan 2024 04:08 AM
Last Updated : 17 Jan 2024 04:08 AM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர், அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சி விகையில் புறப்பட்டு உள் திரு வீதிகளான 4 உத்திர வீதிகளிலும் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாக சாலையில் திரு மஞ்சனம் கண்டருளிய பின்னர் இன்று ( ஜன.17 ) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். 2-ம் நாளான இன்று காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார்.
மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஜன.22-ம் தேதி நெல் அளவை கண்டருளும் நிகழ்ச்சியும், 23-ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம் பெருமாள் வையாளி கண்டருளும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜன.24-ம் தேதி காலை நடைபெறுகிறது.
தொடர்ந்து, 25-ம் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சியும், நிறைவு நாளான 26-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் அறநிலையத் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். இதேபோல, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு தங்க கொடிமரத்துக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. ஜன.24 அன்று தெப்பத் திருவிழாவும், ஜன.25 அன்று உற்சவர் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, வழி நடை உபயங்களை கண்டபின் இரவு வட காவிரியில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளிடமிருந்து சீர்பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT