Published : 08 Jan 2024 04:14 AM
Last Updated : 08 Jan 2024 04:14 AM
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலில் நடந்த மலர் காவடி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மலர் காவடியுடன் கிரிவலம் வந்தனர்.
கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மலர் காவடி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மலர் காவடி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு வேளாங்குறிச்சி ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கவுமார மடாலயம், தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை மாநில சிறப்பு தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம் சுவாமி மாதாஜி, சுவாமி ஆத்மானந்தா, கோவில்பட்டி வேதாந்தானந்தா மடம் ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் உள்ளிட்டோர் அருளுரை வழங்கினர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருந்து மலர் காவடி ஊர்வலத்தை அவர்கள் தொடங்கி வைத்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1,008 பேர் மலர் காவடிகள் எடுத்து மலையை சுற்றி வந்து கோயில் சேர்ந்தனர். நண்பகல் 12.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அர்ச்சனையும், தொடர்ந்து மலர் காவடியில் கொண்டு வரப்பட்ட பூக்களால் புஷ்பாஞ்சலியும் நடந்தது.
விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மகேஷ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை நிறுவன தலைவர் ப.கொன்றையாண்டி தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT