Last Updated : 14 Oct, 2023 03:46 PM

 

Published : 14 Oct 2023 03:46 PM
Last Updated : 14 Oct 2023 03:46 PM

ஆண்டுக்கு 4 நாட்கள் மட்டுமே தரிசனம் தரும் பழநி அருகே மலை உச்சியில் வீற்றிருக்கும் ரெங்கநாத பெருமாள்!

சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மலை உச்சியில் வீற்றிருக்கும் ரெங்கநாத பெருமாள்.

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் கொடைக்கானல் மலை அடிவாரம் அருகேயுள்ள ரெங்கசாமி மலை கரட்டின் உச்சியில் அமைந்துள்ளது ரெங்கநாத பெருமாள் கோயில். பழநி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப் பகுதியின் அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்ல சரியான பாதை வசதி கிடையாது.

இந்த மலையில் காட்டுமாடு, காட்டுப் பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசிப்பதால், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் 4 சனிக்கிழமைகளில் மட்டுமே ரெங்கநாத பெருமாளின் தரிசனம் கிடைக்கும். அதாவது, அந்த நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத் துறையினர் அனுமதிக்கின்றனர்.

பழநி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோர் பழமையான இந்த ரெங்கநாத பெருமாளை தரிசிக்க, அதிகாலை 4 மணி முதல் மலையேறுகின்றனர். அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். குடிநீர், பிஸ்கட், சிற்றுண்டிகளுடன் செல்வது நல்லது என பக்தர்கள் கூறுகின்றனர்.

சுற்றிலும் பசுமை சூழ்ந்த பள்ளத்தாக்கு, ஓங்கி உயர்ந்த மலைகள், மலை உச்சியில் இருந்து பழநி நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கோடை கால நீர்த்தேக்கம், பாலாறு-பொருந்தலாறு அணையின் முழுத்தோற்றம் என திரும்பிய பக்கமெல்லாம்இயற்கை நம்மை வரவேற்கிறது. குளிர்ந்த காற்றும், ரம்மியமான சூழ்நிலையும் மனதை ஒருநிலைப்படுத்துகிறது.

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்.

பெரிய தூண்கள், கலைநயமிக்க சிற்பங்கள், கோபுரங்கள் எதுவுமின்றி, மரத்தின் கீழே கல்திட்டு மீது சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ரெங்கநாத பெருமாள். அருகிலேயே ஆஞ்சநேயர், விநாயகர், கருப்பசாமி, நாகம்மன் தரிசனமும் கிடைக்கிறது.

புரட்டாசி மாதம் தவிர மற்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அந்த மாதம் மட்டுமே பெருமாள் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் பக்தர்கள் வழங்கும் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. வேண்டுதல்கள் நிறைவேற அவல், பொரிகடலை, முறுக்கு, அதிரசம், பலகாரம் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இந்த மலையில் இரண்டு ஊற்றுகள் உள்ளன. ஓர் ஊற்று கோயிலின் அருகிலேயே உள்ளது. இது பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம். அந்த ஊற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பூஜையின்போது மணியடிக்க கோயில் அருகே 2 பாறைகளுக்கு நடுவில் பிரம்மாண்ட மணி பொருத்தப்பட்டுள்ளது.

மலையில் இருந்து கீழே இறங்கினால் 1.5 கி.மீ. தொலைவில்  ரெங்கநாத பெருமாள் பொற்பாத கோயில் உள்ளது. பெருமாளின் பாதங்களை தரிசித்துவிட்டு வந்தால் பிரசாதமாக பக்தர்களே பக்தர்களுக்கு பசியாற அன்னதானம் வழங்குகின்றனர். இயற்கையை நேசிப்பவர்களுக்கு இனிய மலைப்பயணம். இறைவனை தரிசிக்க நினைப்போருக்கு அற்புத ஆன்மிகப் பயணமாக அமைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x