Published : 02 Sep 2023 06:25 AM
Last Updated : 02 Sep 2023 06:25 AM

சின்மயானந்தா 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி ‘உபநிஷத் ஞான யக்ஞம்’ சொற்பொழிவு: சின்மயா மிஷன் சார்பில் ஏற்பாடு

சுவாமி சின்மயானந்தா, ஸ்வாமினி விமலானந்தா.

சென்னை: சுவாமி சின்மயானந்தாவின் 108-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சின்மயா மிஷன் சார்பில் ஞான யக்ஞம் - தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் செப்.3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறும்.

சுவாமி சின்மயானந்தாவின் 108-வது பிறந்த நாள் விழா இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சின்மயா மிஷன் - சென்னை கிளை சார்பில் ஒவ்வொரு மாதமும் சுவாமி சின்மயானந்தா உரை எழுதிய உபநிஷத்துகளை மையப்படுத்தி ‘உபநிஷத் ஞான யக்ஞம்’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

செப்டம்பர் மாதத்துக்கான தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தாவின் மூத்த சீடரான ஸ்வாமினி விமலானந்தா, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பிரம்மத்தை ஆராயும்விதமாக கேனோபநிஷதம் குறிப்பிடும் கருத்துகளை ‘தெய்வீகப் பரிசு’ (Gift of Divine) என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

செப்.3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி, தினமும் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. குருநாதருக்கும் சீடருக்கும் இடையிலான உரையாடல் மூலம் இறைவனின் பூரணத்தை ஒவ்வொருவரும் உணரும் வகையில் சுவாமி சின்மயானந்தாவின் சொற்பொழிவை உள்ளடக்கிய காணொலி, முதல் அமர்வில் இடம்பெறும். 2-வது அமர்வில் ஸ்வாமினி விமலானந்தாவின் சொற்பொழிவு நடைபெறும்.

ஓர் ஆற்றல் மிக்கத் தலைவராகவும், ஆன்மிக பயிற்சியாளராகவும், பிரபல பேச்சாளராகவும் விளங்கும் ஸ்வாமினி விமலானந்தா, உலகம் முழுவதும் சென்று உபன்யாசங்களை நிகழ்த்தி வருகிறார். கல்வித் துறையில் இவரது பன்முகப் பங்களிப்பின் மூலம் ஏராளமான மாணவர்களுக்கு நல்வழிகாட்டியாக உள்ளார்.

இவரது சொற்பொழிவு நிகழ்ச்சி செப். 3-ம் தேதி (நாளை) முதல் செப்.7-ம் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் (தபோவன் ஹால்) மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x