Published : 21 Aug 2023 04:02 AM
Last Updated : 21 Aug 2023 04:02 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், கந்தரேசுவரர், பிரியாவிடை

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திரு விழாவின் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆக.13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் 18-ம் தேதி வரை சந்திரசேகர் உற்சவம் நடந்தது. விழாவின் முதல் நாளான ஆக. 19-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது. 2-ம் நாளான நேற்று காலை நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது. மாலையில் பூத வாகனம், அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

3-ம் நாளான இன்று (ஆக. 21) காலை மாணிக்கம் விற்ற லீலை, மாலையில் கயிலாயபர்வதம், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆக. 30-ம் தேதி மாலை பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி, இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருவிளையாடல் புராணம்: முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்த குளத்தில் மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது. மழையின்றி குளம் வற்றி மீன்கள் இல்லாமல் போனதால், அந்த நாரை அருகே உள்ள வனத்துக்குச் சென்றது. அங்கு அச்சோதீர்த்தம் என்றழைக்கப்பட்ட குளத்தில் ஏராளமான மீன்கள் இருந்தன. அதன் அருகில் முனிவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அந்த புனிதமான இடத்தில் உள்ள குளத்தில் மீன்களை பிடித்து சாப்பிடக் கூடாது என்று நாரை நினைத்தது. அப்போது ஒரு முனிவர், மற்றொருவரிடம் மதுரையம்பதியின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் கூறினார்.

இதைக் கேட்ட நாரை மதுரையம்பதிக்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபட்டது. பொற்றாமரைக் குளத்தில் துள்ளிக் குதித்த மீன்களை உண்ண விரும்பிய நாரை, அப்படி செய்வது பாவமல்லவா என்பதை உணர்ந்து பட்டினியாக கிடந்தது. நாரையின் மீது சிவபெருமானுக்கு கருணை பிறந்தது.

நாரை முன் தோன்றிய சிவபெருமான், என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நாரை, இந்த பிறவியை நீக்கி சிவலோகத்தில் தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டும். தன்னைப் போன்ற பறவைகள், புனிதமான பொற்றாமரைக் குளத்தில் உள்ள மீன்களை உண்டால் அவற்றுக்கு பாவம் வந்து சேரும். எனவே, பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் செய்ய அருள்புரிய வேண்டும் என்று கேட்டது.

சிவபெருமானும் நாரை கேட்ட வரங்களை அருளினார். அதன் பின்பு தற்போது வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே நாரைக்கு முக்தி கொடுத்த படலம் தெரிவிக்கும் கருத்தாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x