Last Updated : 24 Jul, 2014 09:30 AM

 

Published : 24 Jul 2014 09:30 AM
Last Updated : 24 Jul 2014 09:30 AM

புடவைக்காரி வழிபாடு

தமிழகத்தில் பரவலாக வாழையடி வாழையாகப் புடவைக்காரி வழிபாடு நடத்தும் குடும்பங்கள் நிறைய உள்ளன. குறிப்பாகத் திண்டுக்கல், கரூர், நாமக்கல் பகுதிகளில் புடவைக்காரி வழிபாடு செய்வோர் மிகவும் அதிகமாக இருக்கிறார்கள்.

அதென்ன புடவைக்காரி வழிபாடு?

ஒரு குடும்பத்தில் இளம் பெண்கள் இறந்தாலோ, வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பெண்கள் இறந்தாலோ அந்தப் பெண்களைக் குல தெய்வமாக வழிபடுவது வழக்கம். இதற்காகக் கோயில்கூடக் கட்டுவார்கள். மூலவர் சந்நிதியில் பொதுவாக சாமி சிலையை வைத்துப் பிரதிஷ்டை செய்வதற்குப் பதிலாகப் புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.

குல தெய்வத்தை நினைத்துப் புடவை வைத்து சாமி கும்பிடும் குடும்பத்தினர் அந்தப் புடவையை ஒரு குடத்திலோ பேழைப் பெட்டியிலோ வைத்துக் கோயிலில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் சாமி கும்பிடும் படலம் நடந்தாலும், ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.

இந்த மாதத்தில் பெரிய பூஜை, முப்பூஜை என்ற பெயரில் ஒரு குடும்பத்தின் கீழ் உள்ள எல்லாப் பங்காளி குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்பது தனிச் சிறப்பு. எந்த ஊரில் இருந்தாலும் இதற்காகவே குடும்ப சகிதமாகக் கோயிலுக்கு வந்துவிடுவார்கள்.

விழாவில் கன்னிமார் அழைத்தல், பொங்கல் படையல், ஆடுகள், கோழிகள் பலியிடுதல், காடேறுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் என இரண்டு மூன்று தினங்களுக்குத் திருவிழா நடைபெறும். சில இடங்களில் பேழைப் பெட்டியில் வைக்கப்படும் புடவை நைந்து காணப்பட்டாலோ கிழிந்து காணப்பட்டாலோ குல தெய்வம் புடவை கேட்பதாகக் கருதியும் மேற்கண்ட திருவிழாவை நடத்துவார்கள். ஒருவேளை புடவை கிழியாமல் நன்றாக இருந்தால் பூஜை மட்டும் செய்வதும் உண்டு.

தமிழகத்தில் காலம்காலமாக ஆடி மாதத்தில் நடத்தப்படும் இந்தப் புடவைக்காரி வழிபாடு, குடும்பங்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கவும் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x