Published : 02 Jul 2023 04:00 AM
Last Updated : 02 Jul 2023 04:00 AM
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நள்ளிரவில் நடைபெற்ற கழுவன் விரட்டும் விநோத திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார், பூரண பூரணை தேவியர் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு, ஜூன் 1-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றதால் வைகாசி திருவிழா ஆனி மாதத்தில் நடைபெறுகிறது.
இத்திருவிழா ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு கழுவன் விரட்டும் திருவிழா நடைபெற்றது. இதில் கழுவன் வேடமிட்ட ஒருவரை கயிற்றில் கட்டி கோயிலில் நாட்டார்கள் அமர்ந்திருந்த மண்டபத்துக்கு கிராம மக்கள் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். பின்னர் கோயிலில் இருந்த இளைஞர்கள், பெரியோர் கழுவன் வேடத்தில் இருந்தவரை விரட்டத் தொடங்கினர். அவர்களை தீப்பந்தத்தை காட்டி கழுவன் வேடமிட்டவரும் விரட்டினார். பின்னர் அவர் ஊரை விட்டு வெளியேறினார். நாளை (ஜூன் 3) மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து சிங்கம்புணரி மக்கள் கூறியதாவது: கழுவன் விரட்டும் திருவிழாவுக்கு இருவிதமான வரலாறு கூறப்படுகிறது. இதில் பழங்காலத்தில் கிராமத்தில் திருட வந்த கழுவனை மக்கள் பிடித்து நாட்டார்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அக்கழுவனுக்கு மரியாதை செய்து ஊரை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.
மற்றொன்று, மதுரையில் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில், சமணர்களை கழுவேற்றம் செய்ததை நினைவுப்படுத்தும் வகையில், இத்திருவிழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேரில் சுவாமி வலம் வரும்போது கழுவனும், அவரது மனைவி கழுவச்சியும் தேர் சக்கரம் ஏறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வும் தேரோட்டத்தில் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT