Published : 25 May 2021 01:20 PM
Last Updated : 25 May 2021 01:20 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைகள் நடந்த மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி (மே 22) ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் இயக்கம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலையானவர்களின் விவரங்கள் அடங்கிய இணைய அருங்காட்சியகம் மற்றும் விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடங்கிய 11 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, இதுவரை 1,600 பேருக்கும் அதிகமானோர் ஒரு நாள் அல்லது அதற்கு அதிகமான நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகள் உருவாக்கிய சூழல் சீர்கேட்டை எதிர்த்து நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில், காவல் துறையால் 13 பேர், 2018-ம் ஆண்டு மே 22 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் சில நாட்களில் அந்த துப்பாக்கிச் சூடு கலவரத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தனர். அதன் நினைவாக நேற்று 288 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேதாந்தா குழுமத்தின் 'குற்றக் கதைகளும் லாபமும்' என்னும் தலைப்பில் நிகழ்ந்த இணையவழிக் கருத்தரங்கில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு, ஓர் இணைய அருங்காட்சியத்தைத் தொடங்கி வைத்தார்.
இது ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்த தியாகிகளின் நினைவுகளைச் சேமித்து வைக்கும் முயற்சி. தியாகிகளின் ஒளிப்படங்கள், அவர்களுடன் தொடர்புள்ளவர்களை எப்போதும் நினைவுபடுத்தும் பொருட்கள் முதலியவற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த இணைய அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசுகள் இவற்றின் கூட்டு வல்லமைக்கு எதிரான மக்களின் போராட்ட வரலாற்றின் நினைவாக இந்த அருங்காட்சியகம் திகழும்.
எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பட்டு, இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மெட்டமைத்துக் குழுவினருடன் பாடியிருக்கும் 'பேசு' என்னும் ராக் இசைக் காணொலியை, சென்னை சூழல் செயல் குழுவின் உறுப்பினரான பெனிஷா வெளியிட்டார்.
சென்னை கிளைமேட் ஆக்ஷன் குரூப்பைச் சேர்ந்தவர் பெனிஷா. "தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கி ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், இப்போது விவசாயிகள் போராட்டம் எனப் பல போராட்டங்கள் நடந்துவருகின்றன.
தொடர் போராட்டங்களால்தான் எங்களைப் பொறுத்த அளவில் ஆரோக்கியமான சில மாற்றங்கள் உருவாகி வருகின்றன என்பதை நம்புகிறோம். இதற்கு உதாரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளையே சொல்லலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் வளர்ச்சி சார்ந்தவற்றுக்கே பெரிதும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயத்தைப் பெரிதும் முன்னிறுத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
போராட்டங்களின் மூலமும் பாடல்கள், இசை போன்ற கலாச்சார வடிவங்களின் மூலமாகவும் தொடர்ந்து எங்களைப் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இதைப் பார்க்கிறேன்.
அதனால், 'பேசு' என்னும் இந்த இசைப் பாடலின் காணொலியும் சமூக மாற்றத்துக்கான கலை சார்ந்த முக்கியமான பங்களிப்பு என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
இணையவழி அருங்காட்சியகத்தைக் காண: https://www.justaction.cc/museum
'பேசு' இசைக் காணொலியைக் காண: https://www.youtube.com/watch?v=OHqS4P-CKO0
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT