Published : 17 Feb 2021 03:13 PM
Last Updated : 17 Feb 2021 03:13 PM

ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டி: 2-ம் இடம் பெற்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள்

''நீ பெரிய கனவுகளை எல்லாம் காண வேண்டாம். என்னவாக இருந்தாலும் ஒரு நாள் நீ திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும்'' என்ற தொடர் அழுத்த அறிவுரைகளுக்கு மத்தியில் ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா சிங்.

19 வயதான மான்யா, உ.பி.யின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். நடுத்தரக் குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கனவுகள் சிறுவயதில் இருந்தே மான்யாவுக்கு இருந்தன. எனினும் அவரது பெற்றோர்களைத் தவிர சுற்றத்தார் அனைவரும் அவரை, ''உனக்கு எவ்வளவு பெரிய கனவுகள் இருந்தாலும் நீ திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும்'' என்று தொடர்ந்து கூறி வந்துள்ளனர். ஆனால், மான்யா தனது கனவுகளைக் கீழறிக்காமல், தனது பெற்றோர் துணையுடன் படிப்படியாக உயரப் பறக்க தனது 15-வது வயதிலிருந்து உழைத்தார்.

தனது இளம் பருவத்தில் தான் ஒரு பெரிய மாடலாக மாற வேண்டும் என்று எண்ணம் தோன்ற, அதனைத் தனது ஆழ்மனதில் பதிய வைத்துக்கொண்டார் மான்யா. தனது கனவுகளுக்குக் குடும்பத்தின் வறுமை தடையாக இருக்க, பகுதி நேரமாக பீட்சா ஹட் போன்ற இடங்களில் பணியாற்றினார்.

அதில் கிடைத்த பணத்தில் தனது கனவை நோக்கி நகர்ந்து தற்போது ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் 2-ம் இடம் பெற்றுள்ளார்.

பட்டம் பெற்ற மான்யா, ஆட்டோ ஓட்டுநரான தனது தந்தையையும், தாயையும் தனது வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று கண்னீருடன் பேசினார்.

இதுகுறித்து மான்யா சிங் கூறும்போது, “நான் ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் பங்கேற்கப் போகிறேன் என்று கூறியபோது எனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாடலிங்கைத் தொழிலாகக் கருதவில்லை. ஏனெனில் என் குடும்பப் பின்னணியில் பெண்கள் என்றால் திருமணம் செய்துகொள்ள வேண்டும், இல்லையேல் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து நான் முடிவு செய்தேன். எனது கனவைத் துரத்தி என்னை நிரூபித்துவிட்டேன்’’ என்று தெரிவித்தார்.

மான்யா சிங் தனக்கு வழங்கப்பட்ட பட்டத்துடன் தனது தந்தையின் ஆட்டோவில் வந்து இறங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்த மான்சா வாரணாசி முதலிடம் பெற்றார். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மணிகா ஷியோகாண்ட் மூன்றாமிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x